சென்னை: அனைத்து ஊர்களில் இருந்து சென்னை வந்தடையும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்க அனைத்து கிளை மேலாளர்களுக்கும், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “ நமது கழக பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக அனைத்து ஊர்களிலிருந்து சென்னைக்கு வந்தடையும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயக்க அறிவுறுத்தப்படுகிறது. மேலும் தாம்பரம் மாநகர பேருந்து நிறுத்த Shed- க்கு தள்ளி இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட அனைத்து ஓட்டுனர், நடத்துனர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதன் மூலம் தாம்பரம், குரோம்பேட்டை ஆசர்கானா, வடபழனி செல்லும் பயணிகள் பயன் அடைவதுடன் நமது கழகத்திற்கு வருவாய் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் மாலை 05.00 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னைக்கு வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயல் சுங்கசாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
