×

ராமர் பாலம் வழக்கில் விரைவில் விசாரணை: உச்ச நீதிமன்றம் உறுதி

புதுடெல்லி: ராமர் பாலம் தொடர்பான பிரதான வழக்கு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலம் தொடர்பான பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ராமர் பாலம் இயற்கையாக உருவானது அல்ல. மனிதர்களால் கட்டப்பட்டது.  அதனால் சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும், அதனை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரியும் கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசுவாமி உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``இதுதொடர்பாக மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய கலாச்சார அமைச்சகத்துக்கு கோரிக்கை கடிதம் வழங்கலாம். இது தொடர்பான நிலை அறிக்கையை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம்,’’ என கடந்த மாதம் 18ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக ஒன்றிய அரசும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் சுப்பிரமணியசுவாமி ஒரு முறையீட்டை வைத்தார். அதில்,‘‘ராமர் பாலம் தொடர்பாக நிலுவையில் இருக்கும் பிரதான வழக்கை பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என கோரி இருந்தார். அவரது கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி, ராமர் பாலம் தொடர்பான பிரதான மனு விரைந்து பட்டியலிட்டு விசாரிக்கப்படும். இருப்பினும், தற்போது அரசியல் சாசன அமர்வு இருந்து வருவதால் அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தார்.

Tags : Ram Palam ,Supreme Court , Ram Palam case, trial soon, Supreme Court confirmed
× RELATED உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள்...