×

பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரில் ஏறிக்கொண்ட ராஜேஷ் தாஸ், அந்த அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்தாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஆறு பேர் அடங்கிய விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இதற்குப் பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். பிறகு, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்கப் போவதாக அறிவித்தது.

2021ஆம் ஆண்டு ஜூலை 29ம் தேதி, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை சிபிசிஐடி தாக்கல் செய்தது. இரு தரப்பு விசாரணைகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ. 20,500 அபராதமும் விதிக்கப்பட்டது.

விசாரணை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மேல் முறையீட்டு வழக்கில், தீர்ப்பளிக்கப்பட்டது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனையையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பேலா திரிவேதி அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்த நிலையில் ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு அளித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்ததை பார்த்த சாட்சி இல்லை என்றும் பெண் எஸ்.பி. கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராஜேஷ்தாஸ் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதம் செய்து வந்தனர். வழக்கில் பதிலளிக்க தமிழ்நாடு காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் வழக்கை ஜூலைக்கு ஒத்திவைத்தது.

The post பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை appeared first on Dinakaran.

Tags :
× RELATED குவைத் தீ விபத்தில் பலியான தமிழர்கள்...