×

ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு; குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு: 5,529 பதவிக்கு 58 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: குரூப் 2, 2ஏ பதவிக்கு வரும் 25ம் தேதி மெயின் தேர்வு நடக்கிறது. 5,529 பதவிக்கு நடத்தப்படும் தேர்வை சுமார் 58 ஆயிரம் பட்டதாரிகள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவி (நேர்முக தேர்வு பதவி) 116 இடங்கள், குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு மே 21ம் தேதி நடத்தியது. இத்தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சத்து 78,163 பேர் மட்டுமே தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்தனர். இருந்தபோதிலும், முதல்நிலை தேர்வை 84.4 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்.

அதாவது, 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 15.56 சதவீதம் பேர் ஆப்சென்ட் ஆகினர். அதாவது 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் நவம்பர் 10ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 58 ஆயிரம் பேர் முதன்மை தேர்வை(மெயின் தேர்வு) எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு வருகிற 25ம் தேதி நடைபெற உள்ளது. 25ம் தேதி காலை, மாலை என இத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு: குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளமான(www.tnpsc.gov.in, www.tnpscexams.in) பதிவேற்றம்(டவுன்லோடு) செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒரு முறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : haltiquet , publication on the Haliticket website; Mains exam on 25th for Group 2, 2A posts: 58 thousand candidates write for 5,529 posts
× RELATED டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜரான...