சேலம்: `கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ், சேலம் உள்பட 4 மாவட்டங்களைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தின் கீழ், மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று காலை சேலம் வந்தார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து காரில் சேலம் புறப்பட்ட முதல்வர், திடீரென ஓமலூர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்த அவர், ஓமலூர் வட்டாரத்தில் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் பயனாளிகள், திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், அங்கு வந்திருந்த பெண்கள் மற்றும் முதியவர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, சேலம் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ், ₹92.13 கோடி மதிப்பில் நடந்து வரும் ஈரடுக்கு பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக பஸ் ஸ்டாண்டின் மேல் தளத்திற்கு சென்று, பணிகள் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். பின்னர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனத்தினர், சிறுதானிய உற்பத்தியாளர்கள்,
ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள், லாரி பாடி கட்டுமான ெதாழில்துறையினர், மகளிர் சுயஉதவிக்குழுவினர், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள் ஆகியோருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் துறை சார்ந்து தெரிவித்த பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றித்தர உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, சேலம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
அப்போது, நான் முதல்வன் திட்டம் கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக்கும், தொழில்திறன் மேம்பாட்டிற்கும், பன்னாட்டு நிறுவனங்களின் வேலைவாய்ப்பிற்கும் பேருதவியாக இருப்பதாக, மாணவர்கள் பெருமிதம் தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, 4 மாவட்டங்களிலும், காவல்துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
குறிப்பாக, மக்களுக்கும், காவல்துறையினருக்குமான உறவு எளிமையானதாகவும், மனிதநேய அடிப்படையிலும் இருக்க வேண்டும். கியூ பிராஞ்ச், நுண்ணறிவுப் பிரிவு தரும் தகவல்களை கவனமாக ஆராய்ந்து குற்ற செயல்களை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், போதைப் பொருள் ஒழிப்பில் காவல்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையான இடங்களில், உரியநேரத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைகளை ஆரம்பகட்டத்திலேயே தீர்க்க வேண்டும். வருவாய்த்துறை, காவல்துறை ஆகியவை நீதித்துறையுடன் இணைந்து, வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதனிடையே, முதல்வரின் கள ஆய்வில் இரண்டாம் நாளான இன்று காலை, சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வரும் இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, அரசின் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். குறிப்பாக, இந்த 4 மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நல திட்டங்கள்.
அவற்றின் செயல்பாடுகள், திட்ட பயனாளிகள் விவரம், பல்வேறு துறைகள் சார்பில் நடந்து வரும் வளர்ச்சித் திட்ட பணிகள், அவற்றின் தற்போதைய நிலவரம், பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் காலம், பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு விவரம், 4 மாவட்டங்களிலும் புதிதாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், மக்களின் கோரிக்கைகள் என பல்வேறு விவரங்களை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்,தலைமை செயலாளர் இறையன்பு, சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன், மாவட்ட கலெக்டர்கள் சேலம் கார்மேகம், நாமக்கல் ஸ்ரேயா சிங், தர்மபுரி சாந்தி, கிருஷ்ணகிரி தீபக் ஜேக்கப் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
காலையில் கோரிக்கை.. மாலையில் ஆணை
சேலம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று காலை திடீரென ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு வந்திருந்தவர்கள், தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், தையல்மிஷின், ஆதரவற்றோர் உதவித்தொகை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்தனர். இதனை உடனடியாக நிறைவேற்றித்தர அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, ஓமலூர் அடுத்த செல்லப்பிள்ளை குட்ைடயைச் சேர்ந்த ராஜம்மாள் என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆணை, திண்டமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி கோமதி என்பவருக்கு தையல்மிஷின், செல்லப்பிள்ளை குட்டையைச் சேர்ந்த சித்ரா என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை மற்றும் முத்துநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த முரளிதரன் என்பவருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளை, நேற்று மாலையே முதல்வர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளுக்கு வழங்கினார். மனு அளித்த சில மணிநேரங்களிலேயே, அதற்கான தீர்வை வழங்கிய முதல்வருக்கு, பயனாளிகள் நன்றி தெரிவித்தனர்.
