திருவண்ணாமலையில் நள்ளிரவில் பரபரப்பு ரியல்எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார் எரிந்து நாசம்; மர்ம நபர்களுக்கு வலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நள்ளிரவில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை நகராட்சி சாரோன் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(40). , ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மர்ம நபர்கள் இவரது வீட்டின் போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார் மீது, பெட்ரோல் நிரப்பிய பீர்பாட்டிலை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது. இதில் காரின் பெரும் பகுதி எரிந்து நாசமானது. சத்தம் கேட்டு மாடியில் இருந்து இறங்கி வந்த சங்கர், உறவினர்கள் உதவியுடன் உடனடியாக தீயை அணைத்தார்.

புகாரின்படி திருவண்ணாமலை டவுன் போலீசார் வந்து வீட்டில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், நள்ளிரவில் பைக்கில் வந்த 2 நபர்கள் தூரத்தில் நிறுத்திவிட்டு, முகத்தை மூடியபடி ஓடி வந்து பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பும் காட்சிகள் பதிவாகி இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ்  தொழில் முன்விரோதம் காரணமாக யாராவது இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: