×

10,000 பேரிடம் ரூ.800 கோடி மோசடி வழக்கு ‘ஹிஜாவ்’ குழுமத்தின் 3 பெண் முகவர்கள் கைது: 2,835 பேரிடம் ரூ.235 கோடி வசூலித்தது அம்பலம்


சென்னை: ஒரு லட்சத்துக்கு ரூ.15 ஆயிரம் மாதம் வட்டி தருவதாக 10 ஆயிரம் பேரிடம் ரூ.800 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த, ‘ஹிஜாவ்’ குழுமத்தின் 3 பெண் முகவர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னையை தலைமையிடமாக ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் கீழ் எஸ்.ஜி.அக்ரோ புராடக்ட்ஸ், அருவி அக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி, ஆர்.எம்.கே. பிரதர்ஸ் என துணை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் குழுமத்தின் இயக்குநர்களாக சவுந்தரராஜன், அலெக்சாண்டர் உள்ளனர்.

ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எங்கள் நிறுவனத்தில் முதலீடு ெசய்தால், ரூ.1 லட்சத்திற்கு மாதம் 15 சதவீதம் வட்டி, அதாவது ரூ.15 ஆயிரம் தருவதாக பொதுமக்களுக்கு வசீகரமான விளம்பரம் செய்தனர். அதை நம்பி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரூ.800 கோடி முதலீடு செய்தனர். ஆனால், சொன்னபடி முதலீடு செய்த யாருக்கும் 15 % வட்டி தரவில்லை. இதனால் முதலீடு செய்த பொதுமக்கள் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தங்களது பணத்தை திரும்ப கொடுக்கும்படி கோரினார். ஆனால் அதன் இயக்குநர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குநர்கள் மீதும் புகார் அளித்தனர். புகாரின்படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ள சவுந்தரராஜன், அலெக்சாண்டர், நேரு உள்பட 21 நிர்வாகிகள் பொதுமக்களிடம் மோசடியாக பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

அதைதொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மற்றும் இதன் இயக்குநர்களாக உள்ள சவுந்தரராஜன், அலெக்சாண்டர், நேரு உள்பட 21 பேர் மீது ஐபிசி 120(பி), 409, 420, 109 உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ள சென்னை பெரியார் நகரை சேர்ந்த நேரு (49), கோடம்பாக்கம் பாரதீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த குருமணிகண்டன் (51), ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்த முகமது செரிப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவான ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான சவுந்தரராஜன், அலெக்சாண்டர் உள்ளிட்டோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில், பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்த திருவேற்காடு சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கத்தை சேர்ந்த கல்யாணி, அண்ணாநகரை சேர்ந்த சுஜாதா பாலாஜி ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பெண்களும், ஹிஜாவ் அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு முகவர்களாக செயல்பட்டு அவர்கள் மூலம் 2,835 பேரிடம் ரூ.235 கோடி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.


Tags : Hijau , Rs 800 crore, fraud case, Hijau' Group, 3 female agents arrested
× RELATED ஹிஜாவு நிறுவனத்தின் முக்கிய...