×

அனுமதி இல்லாமல் கழிவுநீர் அகற்றும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: சென்னை குடிநீர் வாரியம் எச்சரிக்கை

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் உரிய சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: திறந்தவெளி மற்றும் நீர்நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் மற்றும் முறையான சுத்திகரிப்பை உறுதிசெய்ய தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் (திருத்தச்) சட்டம் (தமிழ்நாடு சட்டம் 34/2022) 02.01.2023 அன்று முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.  

அதனடிப்படையில், சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மூலம் மட்டுமே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் கொடுங்கையூர், கோயம்பேடு, சோழிங்கநல்லூர், பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், திருவொற்றியூர், தாழங்குப்பம், ஜெய்ஹிந்த் நகர்,   கிளிஜோசியம் நகர், மணலி நியு டவுன், மாத்தூர் எம்.எம்.டி.ஏ, தாங்கல்கரை, கடப்பா சாலை,   ராமச்சந்திரா நகர், ஜவஹர் நகர், முகப்பேர் மேற்கு, கிரீம்ஸ் சாலை, கங்கா நகர் கழிவுநீர் உந்துநிலையம் ஆகிய கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே உரிமம் பெற்ற  கழிவுநீர் வாகனங்கள் மூலமாக கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

எனவே, கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொண்டால் உரிய சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   


Tags : Chennai Water Board , Action against lorry owners disposing of sewage without permission: Chennai Water Board warns
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...