டெல்லி: பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் தனியார் டிவி சேனல் நடத்திய ரகசிய புலனாய்வில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கின்றன. முன்னாள் கேப்டன் விராட் கோலி பிசிசிஐ முன்னாள் தலைவர் செளரவ் கங்குலி இடையே ஈகோ பிரச்சனை இருந்ததாக சேத்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் இருந்து டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பை பறிக்க கங்குலி தான் காரணம் என விராட் கோலி கருதியதாகவும், ஆனால் அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தேர்வுக்குழு எடுத்த முடிவு என்றும் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஒரு கூட்டத்தில் விராட் கோலி சொன்னதை கங்குலி ஏற்கமறுத்ததாகவும் அதில் இருந்து இருவருக்கும் இடையே முரண் ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ள சேத்தன் ஷர்மா கங்குலியை பற்றி விராட் கோலி கூறியவை தவறான தகவல் என்றார். முழுமையான உடல் தகுதியை எட்டாத வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊசி மருந்துகளை எடுத்து கொண்டு 80% உடற்தகுதியோடு விளையாடியதாகவும் சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். சேத்தன் ஷர்மாவின் இந்த கருத்து குறித்து பிசிசிஐ தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. சமீபத்தில் தான் சேத்தன் ஷர்மா தேர்வு குழுத்தலைவராக நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் இது போல சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு இருப்பதால் விரைவில் அவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தெரிகிறது.