லாகூர்: பாகிஸ்தானில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளால், அந்நாடு எந்த நேரத்திலும் திவாலாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு, நிலைமையை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) உதவியை எதிர்பார்த்து உள்ளது. ஆனால் சர்வதேச நாணய நிதியம், ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்குவது தொடர்பாக மவுனம் காத்து வருகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொள்வதாகக் கூறினாலும் கூட, இன்னும் நிதிஉதவி அளிக்கப்படவில்லை. இதனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது.
கோதுமை மாவு முதல் பால், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. தற்போது பாகிஸ்தானில் ஒரு கிலோ அரிசி ரூ.200க்கும், பால் லிட்டர் ரூ.150க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.70க்கும், தக்காளி கிலோ ரூ.130க்கும், பெட்ரோல் லிட்டர் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. தேயிலை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால், கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பாகிஸ்தான் அரசின் கஜானா காலியாக இருப்பதாலும், இறக்குமதி பொருட்களுக்கான பணம் செலுத்தாததால் பொருட்களின் விநியோகம் தடைபட்டுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பூட்டோவின் குடும்பத்தை கொள்ளையர்களின் குடும்பம் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக விமர்சித்துள்ளார். டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 275 ஆக சரிந்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 27 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 1998ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த அளவுக்குக் குறைந்துள்ளது. 3 பில்லியன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. இதன் மூலம், ஒரு மாத இறக்குமதியை கூட பாகிஸ்தானால் ஈடுகட்ட முடியாது. அதனால் பாகிஸ்தானின் பொருளாதாரம் எந்த நேரத்திலும் திவாலாகலாம் என்றும், பாகிஸ்தானுக்குள் உள்நாட்டுப் போர் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வும் கூறப்படுகிறது.

