விழுப்புரம் அருகே பேருந்துகள் நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் சாலை மறியல்-போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் :  விழுப்புரம்  அருகே அரசு பேருந்து நின்று செல்லாததை கண்டித்து மாணவர்கள் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி  கலைத்தனர்.விழுப்புரம் அருகே கள்ளிப்பட்டு, வடுவம்பாளையம்,  குச்சிபாளையம், பஞ்சமாதேவி, வி.அகரம், வாணியம்பாளையம் உள்ளிட்ட  பகுதியிலிருந்து கோலியனூர் மற்றும் விழுப்புரம் நகரில் உள்ள அரசு  பள்ளிகளில் சென்று மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு  நகரப் பேருந்தில் சென்று வர இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் காலை பள்ளி நேரம் துவங்கும் போது 7 மணி முதல் 9 மணி வரை  செல்லக்கூடிய அரசு நகர பேருந்துகள் கள்ளிப்பட்டு, வி.அகரம், வாணியம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் நிற்காமல் சென்று வருவதாக கூறப்படுகிறது. இதனால்  மாணவ, மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை வி.அகரம் பகுதியில் அரசு  பேருந்து ஒன்று நிற்காமல் சென்றதை கண்டித்து மாணவ, மாணவிகள் திடீர் சாலை  மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து சாலை மறியலில்  ஈடுபட்டனர். இதனால் விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில்  போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறமும் வாகனங்கள்  அணிவகுத்து நின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை  ரோந்து பிரிவு போலீசார் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது போக்குவரத்து கழக அதிகாரிகளை தொடர்பு கொண்டு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து இனி வரும்  காலங்களில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவ,  மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு  கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: