×

நியூசிலாந்தை தாக்கிய சக்திவாய்ந்த புயல்...வெள்ளம், நிலச்சரிவு, கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால் தேசிய அவசரநிலை பிரகடனம்!!

வெலிங்டன் : நியூசிலாந்து நாட்டை சக்திவாய்ந்த புயல் தாக்கியதால் அந்நாட்டில் தேசிய அவசரநிலை
 பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது ஆக்லாந்து நகரம்.  இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் அந்த நகரமே வெள்ளக்காடாக மாறியது. நகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 4 பேர் பலியாகினர்.  பல கோடிக்கணக்கான ரூபாய் பொருட்சேதத்தையும் இந்த வெள்ளம் ஏற்படுத்தியது... இந்த பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், நேற்று நியூசிலாந்தின் வடக்கு பிராந்தியங்களை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியுள்ளது.

இந்த புயலால் நார்த்லேண்ட், ஆக்லாந்து உள்பட 6 பிராந்தியங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. புயலின் வேகத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் விழுந்தன. வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்ததால் ஆக்லாந்து உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மின் கம்பங்கள் அடியோடு சரிந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மோசமான வானிலை தொடர்ந்து நிலவுவதால் நூற்றுக்கணக்கான விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து புயல், மழை மற்றும் வெள்ளம் பாதித்த பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேப்ரியல் புயல் வட தீவு முழுவதும் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பெரும் கடல் சீற்றங்களை ஏற்படுத்துவதால், நியூசிலாந்து அரசு வரலாற்றில் மூன்றாவது முறையாக அங்கு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவாக உதவிகளை செய்வதற்கு ஏதுவாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக நியூசிலாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.



Tags : New Zealand , New Zealand, storm, flood, landslide, storm surge, state of emergency, declaration
× RELATED ஆப்கானிஸ்தான் அணியிடம் மண்ணை கவ்வியது நியூசிலாந்து: 75 ரன்னில் ஆல் அவுட்