×

புத்தாக்கத் தொழில் திட்டத்தால் பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை!!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவனங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைத்துள்ளன.

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை

திராவிட மாடல் அரசால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023-ல் முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. 2021-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன்றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-ஐ எட்டியுள்ளது. மகளிர் ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை 2021-ம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குமேல் அதிகரித்து 3,163 ஆக உயர்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உகந்த சூழலைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாடு பட்டியலினத்தவர் / பழங்குடியினர் புத்தொழில் நிதி

முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி பட்டியலின மற்றும் பழங்குடியினரால் நிறுவப்படும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து ரூ. 80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 38 நிறுவனங்களுக்கு ரூ. 55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது.தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச்சியினை அடையும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் பட்டியலினத்தவர் பழங்குடியினர் புத்தொழில் நிதித்திட்டமானது 2022- 23 ஆம் நிதி ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டமானது தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம், இப்பிரிவினை சார்ந்த தொழில்முனைவோர்களால் தொடங்கி நடத்தப்பட்டு வரும் புத்தொழில் நிறுவனங்களில் அரசு முதலீடு செய்து வருகின்றது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், நாட்டின் முன்மாதிரியாக விளங்கும் இத்திட்டத்தின் வாயிலாக 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யயப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது சேலம், கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.

இயந்திரவியல், வேளாண் தொழில்நுட்பம், ஊடகத்துறை, செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்தொழில் நுட்பம், பசுமை எரிவாயு தயாரித்தல், இணைய வழி வணிகம், உணவு மதிப்புகூட்டுதல், விண்வெளித் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளில் புத்தாக்க வணிக மாதிரிகளை கொண்டு இயங்குபவையாக இந்த நிறுவனங்கள் உள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற்ற ட்டோ மேன்(Tow man) என்ற நிறுவனமானது முதலீட்டிற்கு பின்பு தனது புத்தாக்க செயல்பாடுகளால் அமெரிக்கத் தமிழ் நிதியத்திடம் இருந்து ரூ.1 கோடி முதலீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்பிட் எய்ட்(ORBID AID) என்ற நிறுவனமானது உலகில் விண்வெளித் தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் 1544 புத்தொழில் நிறுவனங்களை ஒப்பிட்டு நடைபெற்ற ஆய்வில், சிறந்த 20 புத்தொழில் நிறுவனங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. குகன் இண்டஸ்டிரியல் அண்ட் மெனுபேக்சரிங் (Gugan Industrial and Manufacturing Industries) நிறுவனமானது கடினமான உலோகத்தையும் எளிதாக வெட்டும் தனித்துவமான தொழில் நுட்பத்தினை இந்தியாவிலேயே முதல் முதலில் தயாரித்த நிறுவனமாக உள்ளது. எகோஸாப்ட் சொலூசன்ஸ் என்னும் நிதித் தொழில்நுட்ப நிறுவனம் சமீபத்தில் பில்லியன் லோன்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து வாடிக்கையாளர்களின் நிதித்தேவையினை உடனடியாக நிறைவு செய்யும் வகையில் தொழில்நுட்ப சேவையினை வழங்கி வருகிறது. 100 சதவீதம் பழங்குடிகளால் நிர்வகிப்பட்டு இத்திட்டத்தில் முதலீடு பெற்ற ட்ரைபல் கிரீன் ப்புயல் (Tribal Green Fuel) நிறுவனமானது லாண்டனா காமரா என்னும் களைச்செடியில் இருந்து எரிபொருள் தயாரிக்கிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் செயல்படும் இந்த நிறுவனத்தின் வாயிலாக சுற்றியுள்ள வனக்கிராமங்களில் பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இது அப்பகுதியின் சமூக -பொருளாதார மேம்பாட்டிற்கு துணை புரிவதாக உள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் லெமூரியன் வெஞ்சர்ஸ் (Lemurian Ventures) நிறுவனம் உலர்மீன் (கருவாடு) தொழிலில் புதுமையான பேக்கேஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் வாசனை வெளிவராத வகையில் விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் கருவாடு விற்பதற்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மீனவர்களின் பாரம்பரிய தொழிலில், நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்துவதன் வாயிலாக சந்தை வாய்ப்பினை அதிகரித்து ஒரு முன்மாதிரியாக இந்த நிறுவனம் இயங்கி வருகிறது.

கோத்தகிரி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விதமாக அவர்களது பாரம்பரிய தயாரிப்புகளை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் ஐ கேம் டெக்னாலஜிஸ் (Icam Technologies) நிறுவனமானது அரசின் முதலீட்டின் வாயிலாக இந்த தளத்தினை சிறப்பாக வடிவமைத்து வருகிறது. சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் காலண்டரில் குறும்பர் பழங்குடி ஓவியத்தினை வரையும் சந்தை வாய்ப்பினை பெற்று, வணிகத்தில் சிறப்பாக இயங்கிவருகிறது.இத்திட்டத்தில் பயன்பெற்ற நிறுவனங்கள் சுமார் 200க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இவ்வாறு புத்தாக்க சிந்தனையுடனும், விளிம்பு நிலை சமூகத்தினரின் மேம்பாட்டிற்கு உதவும் வகையிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாகவும் இயங்கிவரும் பட்டியலின/பழங்குடியின பிரிவினரால் நடத்தப்படும் மேலும் பல புத்தொழில் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு வழங்கும் பணிகளில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமானது ஈடுபட்டு வருகின்றது.2030-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்ற உயர்ந்த இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் குறிக்கோளை எட்ட புத்தொழில் துறை வளர்ச்சி ஒரு சாதனைக் குறியீடாகத் திகழ்கிறது.புத்தொழில் பதித்துவரும் வெற்றியைத் தக்கவைக்கும் நோக்கோடு உலகின் பல்வேறு பகுதிகளில் முத்திரை பதித்த முன்னணிப் புத்தொழில் நிறுவனங்களும் இளம் தொழில் முனைவோரும் கலந்துகொள்ளும் வகையில் உலகப் புத்தொழில் மாநாடு (Global Startup Summit) வரும் 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டார்ட்அப் திருவிழா (Startup Thiruvizha)

புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் அவர்கள் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது. 21 ஆயிரம் பார்வையாளர்களோடு, 450 புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்ற கண்காட்சி அரங்கமும் இத்திருவிழாவில் இடம்பெற்றது. இந்த விழாவில் 3 கோடியே 64 இலட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் பட்டியலின மலைவாழ் இன இளைஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார்கள். இதனை பட்டியலின பழங்குடி மக்கள் பாராட்டி வரவேற்கிறார்கள்.

The post புத்தாக்கத் தொழில் திட்டத்தால் பட்டியலின – பழங்குடியின இளைஞர்கள் இந்தியாவிலேயே முதல் முதலாக தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை!! appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Chief Minister ,Tamil Nadu ,Shri. M. K. ,Stalin ,Dravitha Model Government ,Dinakaran ,
× RELATED 40க்கு 40 வெற்றியை வழங்கிய தமிழக...