×

ஆசிய அளவில் நடக்கும் பாய்மர படகு போட்டிக்கு அண்ணன், தங்கை தேர்வு

கண்ணமங்கலம்: வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணன், தங்கை ஆசிய அளவிலான பாய்மர படகு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம், கம்மவான்பேட்டை அடுத்த சலமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்(56). ராணுவத்தில் பாய்மர படகு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் விஷ்ணு சரவணன்(23), மகள் ரம்யா சரவணன்(21). இவர்களுக்கு 6 வயதிலிருந்தே படகு ஓட்டும் பயிற்சியை அளித்து வந்தார். இதனால், இருவரும் மிகச்சிறந்த பாய்மர படகு ஓட்டும் வீரர்களாக தேசிய அளவிலும், ஆசியா மற்றும் உலக அளவிலும் போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளனர்.

மேலும், விஷ்ணு சரவணன் தனது 17 வயதிலேயே விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் எம்ஈஜி ராணுவ படைப்பிரிவில் நேரடியாக ஜேசிஓ நாயப் சுபேதார் ரேங்கில் ராணுவ அதிகாரியாக சேர்ந்து தற்போது சுபேதாராக
உள்ளார். கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் விஷ்ணு சரவணன் கலந்து கொண்டார். இதன் மூலம் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரது தங்கை ரம்யாவும் ஒலிம்பிக் தகுதி தேர்வுக்கு கடைசி வரை சென்றுள்ளார்.

கடந்த வருடம் ஆசிய அளவிலான பாய்மர படகு போட்டி அபுதாபியில் நடந்தது. இதில், 18 நாடுகளை சேர்ந்த 31 அணியினர் பங்கேற்றனர். பல சுற்றுகள் நடைபெற்ற கடுமையான போட்டியின் இறுதியில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி விஷ்ணுசரவணன் முதலாவதாக வந்து தங்கப்பதக்கம் பெற்றார். இந்நிலையில்,  இந்த வருடம் ஆசிய விளையாட்டு போட்டிகள்-2023 சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23ம் தேதி முதல் அக்டோபர் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பாய்மர படகு போட்டியில் இந்தியா சார்பில் பங்கு பெறுபவர்களுக்கான இறுதி தகுதி சுற்றுத்தேர்வு நேற்று மும்பை கடலில் நடைபெற்றது. இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு சரவணன், அவரது தங்கை ரம்யா சரவணன் ஆகிய இருவரும் வெற்றி பெற்று ஏசியன் பாய்மர படகு போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2024ல் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பார்கள் என அவர்களது தந்தை சுபேதார் சரவணன் தெரிவித்தார்.

Tags : Brother and sister selected for Asian sailing competition
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...