×

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பரபரப்பு பேட்டி

தஞ்சாவூர்: விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பழ.நெடுமாறன் தெரிவித்தார். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அளித்த பேட்டி: சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாக தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். பிரபாகரன் குடும்பத்தினருடன் எனக்கு உள்ள தொடர்பு மூலமாக அவர் நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் எங்கு இருக்கிறார், எப்போது வருவார் என்பது விரைவில் தெரியவரும். இதுவரை பிரபாகரனை பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும். தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க உள்ளார். தமிழீழ மக்களும், உலக தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவளிக்க வேண்டும்.

விடுதலை புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எத்தகைய உதவியையும் பெறுவதில்லை என்பதில் பிரபாகரன் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்தியாவுக்கு எதிர்ப்பு தளமாக அதை மாற்றும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும், இந்திய பெருங்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணி பார்த்து அதை தடுக்கும்  நடவடிக்கையை எடுக்க இந்திய அரசை வேண்டுகிறோம். தமிழ்நாடு அரசும், அனைத்து கட்சிகளும், தமிழக மக்களும் ஒன்றுபட்டு பிராபகரனுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இது ஒரு நகைச்சுவை: இலங்கை அரசு சொல்கிறது
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக தெரிவித்த கருத்திற்கு இலங்கை அரசு பதில் அளித்து உள்ளது. இதுதொடா்பாக இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் கலோனல் நலின் ஹெரத் கூறியிருப்பதாவது: இது ஒரு நகைச்சுவை. பிரபாகரன் 2009 மே 19 அன்று கொல்லப்பட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது டிஎன்ஏ சோதனையும் அதை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Tags : Prabhakaran is alive: Pash. Nedumaran sensational interview
× RELATED சொல்லிட்டாங்க…