×

இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுதும் திட்டமில்லை, விரிவாக்குகிறோம்: தர்மேந்திர பிரதான் தகவல்

புதுடெல்லி: ஒன்றிய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியதாவது; இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலானது  இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதற்கான எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. வரலாற்றை திரும்ப எழுதுவதற்கான எந்த உள்நோக்கமும் அரசுக்கு கிடையாது.  

முக்கிய வரலாற்று நிகழ்வுகள், ஆளுமைகள் மற்றும் சம்பவங்களை இணைத்து இடைவெளிகளை நிரப்புவதற்காக நாங்கள் வரலாற்றை விரிவுபடுத்துகிறோம். பிரதமர் மோடி சமீபத்தில்  மங்கார்தாம் என்ற இடத்தை பார்வையிட்டார். அங்கு 1913ம் ஆண்டு 1500 பழங்குடியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 17ம் நூற்றாண்டில் ஆறு மற்றும் ஒன்பது வயதில் வீரமரணம் அடைந்த குருகோவிந்த் சாஹிப்பின் மகன்களான சாஹிப்ஜாதா சோராவர் மற்றும் சாஹிப்தாதா பதே சிங் ஆகியோர் நினைவாக வீர்பால் திவாஸ் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது.

ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய தெலுங்கு புரட்சியாளர் அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் ஒடிசாவை சேர்ந்த பாக்சி ஜகாபந்து பித்யாதரா மோகபத்ரா ஆகியோரை பற்றி இந்தியா தெரிந்துகொள்ள வேண்டாமா? இவர்கள் எல்லாம் தற்போதைய இந்திய வரலாற்று புத்தகங்களில் இடம்பெறவில்லை. இதுபோன்ற நிகழ்வுகள் வரலாற்று புத்தகத்தில் இடம்பெற செய்ய வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடாகும். தமிழ்மொழி உலகின் மிக பழமையான மொழியாகும். இது தான் எங்கள் பார்வை. இந்தியா அனைத்து மொழிகள், அனைத்து கலாச்சாரங்கள் மற்றும் அனைத்து மதங்களையும் மதிக்கும் நாடாகும் என்றார்.

34,000 கல்லூரிகளுக்கு என்ஏஏசி அங்கீகாரம் இல்லை; ஒன்றிய கல்வி துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்:  நாடு முழுவதும் ஒன்றிய கல்வி துறை அமைச்சத்தின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 14,606 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுவரை 6ஆயிரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானிய குழுவின் தகவலின்படி, 1113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகளில் 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9062 கல்லூரிகளுக்கு மட்டும் என்ஏஏசியின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 695 பல்கலைக்கழகங்கள் மற்றும் 34000 கல்லூரிகளுக்கு என்ஏஏசி அங்கீகாரம் இன்றி இயங்கி வருகின்றன.

Tags : India ,Dharmendra Pradhan , No plans to rewrite India's history, expanding: Dharmendra Pradhan informs
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...