×

வேளாண் பட்ஜெட் தயாரிக்க விவசாயிகள், பொதுமக்கள் கடிதம், வாட்ஸ்அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம்: வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிக்க விவசாயிகள், விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பொதுமக்கள் கடிதம், வாட்ஸ்மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிப்பதற்கு முன்னர் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண் விளைபொருள் ஏற்றுமதியாளர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளை சார்ந்த மக்களின் கருத்துக்களை கேட்டு, அதற்கேற்ப வேளாண் நிதிநிலை அறிக்கையினை தயாரிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, 22.01.2023 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் எனது தலைமையில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் திண்டுக்கல், கரூர், தேனி, திருச்சி, திருப்பூர் மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். தொடர்ந்து 24.01.2023 அன்று திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இதுபோன்று தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் விரைவில் நடத்தப்பட உள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக் காட்சிகள் மூலமாகவும், அனைத்து பிரிவுகளை சார்ந்துள்ள மக்களிடம் இருந்து கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சியர்   தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ள அனைத்து கருத்துக்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகளை கீழ்க்காணும் வழிகளில் தெரிவிக்கலாம்.

* உழவன் செயலியில் வேளாண் நிதிநிலை அறிக்கை எனும் பக்கத்திற்கு சென்று தெரிவிக்கலாம்.
* கடிதம் மூலம் தெரிவிக்க விரும்புகிறவர்கள், ‘வேளாண்மை உற்பத்தி ஆணையர் (ம) அரசு செயலர், வேளாண்மை - உழவர் நலத்துறை, தலைமை செயலகம், புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை-9’ என்ற முகவரியிலும், மின்னஞ்சல் முகவரி  nfarmersbudget@gmail.com மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் தகவல் தெரிவிப்பதற்கான தொலைபேசி 9363440360 எண்ணில் தெரிவிக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளை போன்றே, எதிர்வரும் 2023-24ம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் உழவர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ள கருத்துக்கேட்பு ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டு, வேளாண்மையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் தங்களின் மேலான கருத்துக்களை அரசுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Farmers, public can give feedback through letter, WhatsApp to prepare agriculture budget: Agriculture Minister Notification
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...