×

சவுகார்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெறும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நடைபெற்று வரும் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெற்று மக்கள் மறுகுடியமர்த்தப்படுவர் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டிய வால்டாக்ஸ் சாலை, கல்யாணபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ₹46 கோடி மதிப்பில் புதிதாக 288 அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது, கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பணிகளை இன்னும் ஏன் முடிக்கவில்லை? குறித்த நேரத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் கறுப்பு பட்டியலில் இடம்பெறுவார் என எச்சரிக்கை விடுத்தார். அப்பணிகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கல்யாணபுரம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், கடந்த 2019ம் ஆண்டு ₹46 கோடி மதிப்பில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் துவங்கியது.

இதில் ஒப்பந்ததாரரின் கவன குறைவு, சுணக்கம் காரணமாக இப்பணிகள் முடிவடையாத நிலையில் இருந்தது. தற்போது சென்னை மாநகராட்சி, மின்சாரம், கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரியம் என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளோம். இன்னும் 2 மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிந்து, இங்கு மக்கள் மறுகுடியமர்த்தப்படுவர். நாங்கள் கட்டுமான பணிகளில் எவ்வித சமரசமும் வைத்து கொள்வதில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்கள் வாக்கு கேட்டு சென்றபோது, அப்பகுதி மக்கள் திமுக அரசின்மீது எவ்வித அதிருப்தியும் தெரிவிக்கவில்லை.

இத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார். அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தின் ஒருசில இடங்களில் பட்டியலின மக்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவது இல்லை என்பதை அறிந்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, அவற்றை சரிசெய்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த ஆய்வில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர், பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Saugarbhet ,Minister ,B. K.K. SegarBabu , Apartment work in Saugarpet area will be completed in 2 months: Minister PK Shekharbabu interview
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...