ஊட்டி: வார விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா வரும் பள்ளி குழந்தைகளால் தாவரவியல் பூங்கா களைகட்டுகிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலனவர்கள் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களே. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரள மாநிலங்களில் இருந்தே அதிகளவு சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர்.
இதனால், வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களின் போது ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். தற்போது கேரள மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா வருகின்றனர். இவர்கள் வார விடுமுறை நாட்களில் ஊட்டியை முற்றுகையிடுவதால், ஊட்டி களை கட்டுகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவு வரும் நிலையில், தாவரவியல் பூங்கா மக்கள் கூட்டத்தால் களை கட்டுகிறது.
நேற்றும் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் சுற்றுலா வந்திருந்தனர். இதனால், தாவரவியல் பூங்கா பெரிய புல் மைதானம் மாணவ, மாணவிகளால் களைக்கட்டியது. இவர்கள் அங்குமிங்குமாக ஓடி விளையாடியும், புல் தரைகளில் உருண்டும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
