×

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் விரிவுபடுத்தப்பட்ட நெடுஞ்சாலையோரம் மீண்டும் ஆக்கிரமிப்பு: அப்புறப்படுத்தி முறைப்படுத்த கோரிக்கை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்புறப்படுத்தி முறைப்படுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி வழியாக கேரளாவில் பாலக்காடு, திருச்சூரில் இருந்தும், கோவை வழித்தட பகுதியிலிருந்தும் மதுரை, நெல்லை, நாகர்கோயில் என பிற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு பகுதியாக அமைந்துள்ளது.

நகரில் இருந்து செல்லும் உடுமலைரோடு, பல்லடம்ரோடு, பாலக்காடுரோடு, கோவைரோடு, வால்பாறை ரோடு, மீன்கரை ரோடு உள்ளிட்ட நெடுஞ்சாலை ரோடுகளில் பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நெடுஞ்சாலைரோடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக, ஆக்கிரமிப்பு பகுதி மட்டுமின்றி தனியார் மற்றும் சில பகுதியில் அரசு இடமும் கையகப்படுத்தப்பட்டு, இரு வழிப்பாதையாகவும், பல இடங்களில் குறுகலாகவும் இருந்த ரோடுகள் நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் உடுமலை ரோடு, பல்லடம் ரோடு, பல்லடம் ரோடும் அடுத்தடுத்து அகலப்படுத்தப்பட்டன. தற்போது, பல்வேறு கிராமங்களுக்கு மட்டுமின்றி, சுற்றுலா பகுதிகளுக்கும் செல்லும் முக்கிய ரோடான மீன்கரைரோடு அண்மையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது, வால்பாறை ரோட்டின் ஒரு பகுதி விரிவாக்கம் செய்யப்படுகிறது. இப்படி, வாகன விபத்துக்களை கட்டுப்படுத்தவும், விரைந்து செல்வதற்கு வசதியாகவும் நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட ரோட்டோரம்,  மீண்டும் அக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுகிறது.

குறிப்பாக வாகன போக்குவரத்து அதிகமுள்ள மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு மற்றும் பேரூராட்சி வழியாக செல்லும் ஆனைமலை ரோட்டில் ஆக்கிரமிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கிறது. தற்போது  நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வாகனங்கள் விரைந்து செல்ல எந்தவித இடையூறு இல்லாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதே நேரத்தில், ரோட்டோரம் சிறுசிறு கடைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை கடைகள் என அடுத்தடுத்து ஆக்கிரமிக்கப்படுவது அதிகமாகியுள்ளது.

இந்த நிலையை இப்போதோ கட்டுப்படுத்தாவிட்டால், வாகன போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் காலப்போக்கில்  மீண்டும் பெரிய அளவு ஆக்கிரமிப்பு அதிகரிப்பதுடன், ரோடு குறுகலாகி வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுபோல், ரோட்டோரம் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி செல்வதால், இரவு நேரத்தில் அந்த வழியாக விரைந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்ளும் நிலை ஏற்படுகிறது. எனவே, மீன்கரை ரோடு, வால்பாறை ரோடு, உடுமலை ரோடு என பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை இப்போதே அப்புறப்படுத்தி முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டோரம் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்துவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.




Tags : Pollachi , Re-encroachment along widened highway in Pollachi circle: Request for removal and regularization
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!