×

ரூ.12,150 கோடி செலவில் அமைக்கப்பட்ட டெல்லி-மும்பை விரைவு சாலை முதற்கட்ட பகுதி இன்று திறப்பு: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்; ஜெய்ப்பூருக்கு மூன்றரை மணி நேரத்தில் செல்லலாம்

புதுடெல்லி: டெல்லி-மும்பை விரைவுச் சாலை திட்டத்தில், ரூ.12,150 கோடி செலவில் டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் தவுசா - லால்சாட் வரை அமைக்கப்பட்ட முதற்கட்ட விரைவுச்சாலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
நாட்டின் தலைநகரான டெல்லியையும், வர்த்தக மையமான மும்பையையும் இணைக்கும் வகையில் ரூ.1 லட்சம் கோடி செலவில் 1,386 கிமீ தூரத்திற்கு டெல்லி-மும்பை விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2018ல் தொடங்கியது. இதுவே நாட்டின் மிக நீண்ட விரைவுச் சாலையாகும். இதில் முதல் கட்டமாக டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் தவுசா-லால்சாட் வரை 246 கிமீ தொலைவுக்கு ரூ.12,150 கோடியில் விரைவுச் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த முதல்கட்ட விரைவுச்சாலையை பிரதமர் மோடி தவுசாவில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த முதல்கட்ட விரைவுச்சாலையின் மூலம் டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு 3.5 மணி நேரத்தில் செல்ல முடியும். தற்போது பயண நேரம் 5 மணி நேரமாக உள்ளது. இந்நிகழ்ச்சியின் போது, தவுசாவில் இருந்து ரூ.18,100 கோடிக்கான சாலை மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி, ரூ.5,940 கோடி செலவில் உருவாக்கப்படும் 247 கிமீக்கான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இது குறித்து பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘புதிய இந்தியாவில் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் இணைப்பின் இயந்திரமாக சிறந்த சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் ஒன்றிய அரசு முக்கியத்துவம் தருகிறது. டெல்லி-மும்பை விரைவுச் சாலையின் முதல் கட்டப்பகுதி, அதன் சுற்றுவட்டப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி-மும்பை விரைவுச் சாலை திட்டத்தின் மூலம் இரு நகரங்களுக்கு இடையேயான தூரம் 1,424 கிமீயில் இருந்து 1,242 கிமீ ஆக 12 சதவீதம் குறைகிறது. மேலும், பயண நேரம் 24 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக குறையும். அதாவது, 8 வழிச்சாலை கொண்ட இந்த விரைவுச்சாலை மூலம் 12 மணி நேரத்தில் டெல்லியிலிருந்து மும்பையை அடைய முடியும். இந்த விரைவுச் சாலை டெல்லி, அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்கள் வழியாக செல்கிறது. இது கோட்டா, இந்தூர், ஜெய்ப்பூர், போபால், வதோதரா மற்றும் சூரத் போன்ற முக்கிய நகரங்களை இணைக்கிறது.இதன் மூலம், நாட்டின் பொருளாதார மாற்றத்தில் டெல்லி-மும்பை விரைவுச்சாலை முக்கிய பங்களிப்பை அளிக்கும் என பிரதமர் அலுவலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

* டெல்லி-மும்பை விரைவுச் சாலையில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியும்.
* இதன் மூலம் ஆண்டிற்கு 30 கோடி லிட்டர் எரிபொருள் மிச்சப்படுத்துவதோடு, 80 கோடி கிலோ கார்பன் உமிழ்வு தடுக்கப்பட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
* அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய விரைவுச் சாலையான இத்திட்டத்தில் ஒன்றிய பாஜ அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது.

Tags : Delhi- ,Mumbai Expressway ,PM ,Modi ,Jaipur , 12,150 crore Delhi-Mumbai Expressway first phase inaugurated today: PM Modi dedicates to country; Jaipur can be reached in three and a half hours
× RELATED பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில்...