×

அம்மா சென்டிமென்ட் காட்டி ரூ.40 ஆயிரம் சுருட்டிய பீகார் மாநில வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்: உறுதி செய்யாமல் பணம் அனுப்பாதீர்கள்; மேன்ஷன்வாசிகளே உஷார்; அதிகாரிகள் அறிவுரை

சென்னை: அம்மா அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளளார், என் கூகுள் பே வேலை செய்யவில்லை என்று பத்து பேரிடம் தலா ரூ.5000 வாங்கியும், எமர்ஜென்சி என்று அம்மா சென்டிமென்ட்டை சொல்லி ரூ.40 ஆயிரத்தை சுருட்டிய வாலிபரை போலீசார் அலேக்காக தூக்கினர். இதேபோன்று தன் கொள்கையை மாற்றாமல் வேறு ஒரு மேன்ஷனில் கைவரிசை காட்டியபோது கையும் களவுமாக பிடிப்பட்டார். சென்னை தரமணியை அடுத்த திருவேங்கடம் நகரில், வெங்கட் சாய் என்ற தங்கும் விடுதி உள்ளது.

கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு விடுதிக்கு சென்ற வாலிபர், ஒருவர் வெகு நேரமாக நோட்டமிட்டு பின்னர் முதல் தளத்துக்கு சென்று அங்கு அறையில் தங்கி இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளார். காரணம் மேன்ஷன் என்பதால் ஒரு மாதம் மேன்ஷனில் தங்குபவர் அடுத்த மாதம் பல்வேறு காரணங்களால் மேன்ஷன் மாறுவது உண்டு அல்லது சொந்த ஊருக்கு திரும்புவது உண்டு. இதை நன்கறிந்த வாலிபர் ஒருவர், நீண்ட நாட்களாக மேன்ஷனில் தங்கி இருக்கும் நபர்களின் பட்டியலை சேகரித்துள்ளார். பின்னர், அவர்களை தன் பகடைகாய்களாக பயன்படுத்தி உள்ளார். காரணம், இவர் சந்தித்த நபர்கள் நிறைய மாதங்களாக அதே மேன்ஷனில் தங்குவதை உறுதி செய்த பிறகே அந்த வாலிபர் பணம் பறிக்க முயற்சி செய்தார்.

இந்நிலையில் மேன்ஷனில் நுழைந்த அந்த வாலிபர், அங்குள்ளவர்களிடம், நான் கீழ் தளத்தில் புதிதாக வந்து தங்கி இருக்கிறேன் என்று முதலில் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். பின்னர் எனது அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன் அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூ.5000 பணம் அனுப்ப வேண்டும். எனது கையில் பணம் இல்லை, இந்த நேரத்தில் எனது கூகுள்-பே ஆப் லாக் ஆகி விட்டது. நீங்கள் கூகுள்-பே வில் பணம் அனுப்பினால் நன் ATM-ல் பணத்தை எடுத்து தருகிறேன் என்று அப்பாவியாக பேசியுள்ளார். வாலிபரின் மோசடி ஏமாற்று பேச்சை நம்பிய அவர்கள் அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூபாய் 5,000 அனுப்பியுள்ளனர்.

மேல் தளத்தில் வசிப்பவர்களிடம் நைசாக பேசி பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர், பின்னர் கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் சென்று நான் மேல் தளத்தில் புதிதாக வந்துள்ளேன். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளேன்’ என அதே ஏமாற்று பாணியில் நைசாக பேசி அவர்களிடமும் ரூபாய் 5,000 கூகுள்-பே மூலம் அனுப்ப வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் தங்கும் விடுதியில் வசிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனையில், உடனே அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு ரூபாய் 40,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம், நான் ATM வாசலில் நிற்கிறேன். முன்னதாக அனுப்பிய அதே கூகுள்-பே விற்கு ரூபாய் 40,000 அனுப்பி விடுங்கள். பணத்தை உடனே எடுத்து வருகிறேன் என கூறி உள்ளார். அதையும் நம்பிய விடுதியில் தங்கி இருந்த நான்கு பேர் ரூபாய் 40,000 அனுப்பி உள்ளனர்.

வெகு நேரமாகியும் அந்த வாலிபர் வராததால் சந்தேத்தின் அடிப்படையில் தேடி சென்றபோது, அந்த வாலிபர் விடுதியில் தங்கவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதையும் உணர்ந்துள்ளனர், அந்த இளைஞர்கள். பின்னர் விடுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தி இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை கைப்பற்றி அந்த மோசடி நபரின் புகைப்படத்தை இதர விடுதிகளில் தங்கி உள்ள நண்பர்களுக்கும் அனுப்பி எச்சரிக்கையாக இருக்க கூறினர். மேலும் சிசிடிவி காட்சிகளுடன் தரமணி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாலை தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த வாலிபர் அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார். அங்கிருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டு அவரை பிடித்து தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயதான சச்சின்குமார் என்பதும் அவருடைய கூகுள்-பே வங்கி கணக்கை சோதனை செய்தபோது இதேபோன்று பலரிடம் பொய்யாக பேசி மோசடி செய்து பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சச்சின்குமார் மீது வழக்கு பதிவு செய்த தரமணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த வாலிபர் அதேபோல் பேசி மோசடி வலைவிரித்து பணம் பறிக்க முயன்றுள்ளார்.

Tags : Bihar ,State ,Gatti ,Ushar , Bihar youth who rolled up Rs 40,000 for showing Amma sentiments was knocked down by police: Don't send money without confirmation; Mansion residents beware; Officers advised
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!