அந்தியூர்: பள்ளி மதிய உணவில் பல்லி கிடந்ததால் 50 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குப்பாண்டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கரட்டூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 157 பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் நேற்று 132 பேர் மதிய சத்துணவு சாப்பிட்டனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும் தீபிகா என்ற மாணவியின் உணவு தட்டில் பல்லி கிடந்துள்ளது. உடனே அருகில் இருந்த சக மாணவி பாரதியிடமும் பல்லி கிடப்பதை காண்பித்துள்ளார்.
இது குறித்து அங்கிருந்த சத்துணவு பணியாளர் மற்றும் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். உடனே அவர்கள் இந்த உணவை சாப்பிட வேண்டாம் என பள்ளி குழந்தைகளிடம் கூறியதாகவும், சிலர் அதற்குள் சாப்பிட்டு முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்று மாலை பெற்றோர்களிடம் இது குறித்து அப்பள்ளி குழந்தைகள் கூறியுள்ளனர். இது பெற்றோர்கள் இடத்தில் பெரிய பதற்றத்தை உருவாக்கியது.
இந்நிலையில் கரட்டூர், நாடார் காலனி, தம்மங்கரடு, கரட்டூர் மேடு, தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளி குழந்தைகள் 50க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் அத்தாணி, அந்தியூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவ, மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் வீடு திரும்பினர்.