×

முகநூல் பழக்கத்தில் திருமணம்; நகை, பணத்துடன் இளம்பெண் ஓட்டம்: விழுப்புரத்தில் பரபரப்பு

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்பூண்டியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய கூலி தொழிலாளி. இவர் முகநூலின் மூலம் காரைக்கால் திருவிடைக்கலி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணுடன் பழக்கமானார். பின்னர் அவர்களுடனான நட்பு காதலாக மலர்ந்தது. அப்போது அப்பெண் தான் ஒரு அனாதை எனவும், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதை ஏற்ற மணிகண்டன் தனது விருப்பத்தை அவரது தாய் ராணியிடம் கூறியுள்ளார். மகனின் ஆசையை நிறைவேற்ற தாயும், மகனுடன் சேர்ந்து காரைக்கால் சென்று அப்பெண்ணை, தனது சொந்த கிராமமான சிறுதலைப்பூண்டி கிராமத்துக்கு அழைத்து வந்தார். கடந்த நவம்பர் 18ம் தேதி அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினரின் ஆசியுடன் திருமணம் நடைபெற்றது.

மணப்பெண்ணுக்கு 8 பவுன் நகையை சீராக மணமகன் விட்டாரே அளித்தனர். திருமணத்திற்கு பின்னர் ஒரு மாதம் மணமகனுடன் சந்தோஷமாக இருந்த மகாலட்சுமி, திடீரென டிசம்பர் 11ம் தேதி மணிகண்டன் மற்றும் அவர் பெற்றோர் விவசாய நிலத்துக்கு சென்றிருந்த நேரத்தில் 8 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்த ஒரு லட்சம் பணத்துடன் தப்பிச்சென்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த  மணிகண்டன் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் செஞ்சி சரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமணம் செய்த போட்டோ உள்ளிட்ட ஆதாரங்களை கொடுத்து அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முகநூலில் பழகி திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Villupuram , Marriage in Facebook Habits; Teen runs away with jewels, money: Villupuram stirs
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...