ஈரோடு: அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி, தேமுதிக வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும் குழப்பங்களுக்கு இடையே அதிமுகவின் வேட்பாளராக தென்னரசு களமிறங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளன.
முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. அதன் அடிப்படையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டுமான பணிகளையே இன்னும் தொடங்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் ராமநாதபுரத்தில் நடந்து வருகிறது.
சிறைகளில் உள்ள 75% பேர் குற்றம் நிரூபிக்கப்படாமல் தான் உள்ளனர். தனி நபர்கள் மீதான வரியை குறைக்க வேண்டும். தனிநபர் மீதான வரியை குறைத்தால் நாங்கள் வரவேற்போம். அதானி குழுமத்தில் ஏன் அதிக முதலீடுகள் செய்யப்பட்டன? அதானி குழுமத்திற்கு வங்கிகள் எதன் அடிப்படையில் கடன் கொடுத்தன? ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி தான் இந்தியாவின் வளர்ச்சி என்பதை ஏற்க முடியாது என கூறினார்.
