×

பல்லாவரம் அருகே பார்க்கிங் பகுதியாக மாறிய சாலை: பொதுமக்கள் கடும் அவதி

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பிரதான சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் அடுத்த பம்மலில் இருந்து நாகல்கேணி மற்றும் திருநீர்மலை மெயின்ரோடு செல்வதற்கு பம்மல் அண்ணா சாலையே பிரதான சாலையாக உள்ளது. காலை, மாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்காமல் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வாகன ஓட்டிகள் இந்த சாலை வழியாக எளிதாக சென்று வருகின்றனர்.

இதனால், வாகன எரிபொருள் செலவு மட்டுமின்றி, அதிகப்படியான பயண நேரமும் மிச்சமாகிறது. அதுமட்டுமின்றி பம்மல், அண்ணா சாலையை சுற்றிலும் ஏராளமான தோல் தொழிற்சாலைகளும், மீன் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளும், குடியிருப்புகளும் அமைந்துள்ளன. அவற்றில் பணிபுரிய தினமும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் மற்றும் இப்பகுதி பொதுமக்கள் என தினமும் ஏராளமானோர் அண்ணா சாலை வழியாகத்தான் வந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பம்மல், அண்ணா சாலை சமீப காலமாக வாகன நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.

குறிப்பாக, இந்த சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளாக இருக்கட்டும், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களாக இருக்கட்டும், அனைவரும் தங்களது வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி விட்டுத்தான் செல்கின்றனர். இதுபோன்ற, ஆக்கிரமிப்புகளால் சாலையின் பரப்பளவு வெகுவாக குறைந்து விடுகிறது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலை தடுமாறி, சாலையில் நிற்கும் வாகனங்கள் மீது மோதி, அடிக்கடி சிறுசிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். மேலும், ஆபத்து காலங்களில் உயிர்காக்கும் அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட வாகனங்களும் சாலையில் விரைவாக பயணிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களது மருத்துவமனை எதிரேயுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, தங்களது நிறுவனங்களின் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாற்றியுள்ள நிலையில், தற்போது ஒருபடி மேலே சென்று, பிரதான சாலையையும் தங்களது வசதிக்காக வாகன நிறுத்தமாக மாற்ற தொடங்கியுள்ளனர். தற்போது, தமிழக அரசு பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை எவ்வாறு தரம் உயர்த்தி, தடையில்லாத வாகன போக்குவரத்திற்கு வழிவகை செய்யலாம் என்று சிந்தித்து செயல்பட்டு வருகிறது.

தனிநபர்கள் இதுபோன்று, அரசு சொத்தை ஆக்கிரமிப்பு செய்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, பம்மல், அண்ணா சாலையில் தனியார் மருத்துவமனை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை எடுத்து, பெருகி வரும் விபத்துகளை தடுப்பதுடன், வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pallavaram , Road turned into parking area near Pallavaram: Public suffering
× RELATED கோயில் திருவிழாவில் பொதுமக்கள்...