தாம்பரம்: தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட வரதராஜ பெருமாள் நகர், அமுதம் நகர், நேவிநாத நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை காலங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்வது வாடிக்கையாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தின்போது, அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதோடு மழை காலத்தின்போது பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பல்வேறு பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
தொடர்ந்து, இதுபோன்று மழைநீர் தேங்கி நிற்கும் நிலையை மாற்றி பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்த உடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், 2 முறை நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, தமிழக அரசு சார்பில், சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியிலிருந்து ரூ.4.18 கோடி செலவில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு நேற்று அந்தப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘இந்த பகுதிகளில் 1454 மீட்டர் மழைநீர் கால்வாய்களும், 689 மீட்டருக்கு சிமென்ட் சாலை பணிகளும் நடைபெறவுள்ளது. மழைநீர் கால்வாய்கள் மூலம், இப்பகுதியில் மழை காலங்களில் வெள்ளம் பாதிப்பு ஏற்படாமல் மழைநீர் நேரடியாக அடையாறு ஆற்றிற்கு கொண்டு செல்லும் வகையில், கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளதால், இப்பகுதியில் வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்.