திருவொற்றியூர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் நீர்வழித்தடங்களில் டிரோன் மூலம் கொசு புழுக்கள் ஒழிப்பு பணி: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: திருவொற்றியூர், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் உள்ள நீர்வழித்தடங்களில் டிரோன் மூலம் கொசுப்புழுக்கள் ஒழிப்புப்பணி மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசுத்தொல்லை மற்றும் கொசுக்களினால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியினை கட்டுப்படுத்த டிரோன் இயந்திரங்களை கொண்டு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 7ம் தேதி திரு.வி.க.நகர், அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பக்கிங்காம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களிலும், 8ம் தேதி தண்டையார்பேட்டை மண்டலம், கோடம்பாக்கம் மண்டலம் மற்றும் அடையாறு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் கால்வாய், வியாசர்பாடி கால்வாய், பக்கிங்காம் கால்வாய், லிங்க் கால்வாய், ஆர்.வி.நகர் கால்வாய், மாம்பலம் கால்வாய், விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் அடையாறு ஆற்றிலும், 9ம் தேதி ராயபுரம், அம்பத்தூர் மற்றும் ஆலந்தூர் ஆகிய மண்டலங்களுக்குட்பட்ட பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு, பாடி புதுநகர் கால்வாய், கொரட்டூர் பெரிய கால்வாய், பாடிக்குப்பம் கால்வாய், அடையாறு ஆறு மற்றும் வீராங்கல் ஓடை ஆகியவற்றில் டிரோன் இயந்திரங்களை கொண்டு தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, நேற்று திருவொற்றியூர் மண்டலம், வார்டு 4, 6 மற்றும் 7க்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாய், தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 114, 116, 120, 121, 123, 124 மற்றும் 125க்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாய், வார்டு 109, 110 மற்றும் 111க்கு உட்பட்ட கூவம் ஆறு, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு 168 மற்றும் 169க்கு உட்பட்ட வீராங்கல் ஓடை மற்றும் வார்டு 183 மற்றும் 185க்கு உட்பட்ட பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றில் டிரோன் இயந்திரங்களைக் கொண்டு கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு, தீவிர கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: