மாநில அரசுகளை பாஜ விலைக்கு வாங்கி விடுகிறது; ப.சிதம்பரம் பாய்ச்சல்

சிவகங்கை: மாநில அரசுகளை பாஜ விலைக்கு வாங்கி விடுவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்வது தொடர்பாக, சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டியை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் முதலீடு பல கோடி வந்தால் தான் நாட்டின் வளர்ச்சி விகிதம் கூடும். நடப்பாண்டில் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினர். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

அப்படி இருக்க அடுத்த ஆண்டு ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என கூறுகின்றனர். இதெல்லாம் ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போல் உள்ளது. ஒரு ஆண்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்ய முடியாது. அதற்கு பல விதிகள் இருக்கிறது.

பிரதமர் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். காங்கிரஸ் 356வது பிரிவை அன்றைய சூழ்நிலையில் பயன்படுத்தியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தான் ஒரு அரசை நீக்குவது என்பதற்கு பல வரைமுறை வகுக்கப்பட்டது. இந்த அரசு அரசியல் சாசனத்தை பின்பற்றி நடக்கிறதா? அரசை நீக்குவதெல்லாம் தற்போது இல்லை. விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அண்மையில் கோவாவில் இது தான் நடந்தது. 356வது பிரிவை சொல்பவர் அதையும் சொல்லி இருக்க வேண்டாமா? நீதிபதிகளுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் என்ற குணச்சித்திரங்கள் தெரியாது. இவர்கள் இருவரும் பேச மாட்டார்கள் என்பதும் தெரியாது. பாஜ என்ற நச்சுப்பாம்பை கழுத்தில் போட்டுக் கொண்டு அதிமுக வலம் வரட்டும். மோடியின் நண்பர் அதானி என்பதை மோடி மறுக்கவில்லை.  மறுக்க முடியாது. அரசு பதில் சொல்லட்டும். மோடி பதில் சொல்லட்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: