×

முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிடத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம்: கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதியளித்துள்ளது. முன்னாள் முதல்வர் கலைஞர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி மறைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இதனையடுத்து, அப்பகுதியில் 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கலைஞர்க்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அதற்கான பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. இதுதவிர, நினைவிடத்தின் அருகில் வங்கக்கடலில் கலைஞர் நினைவாக பேனா நினைவுச்சின்னம் ரூ.81 கோடியில் அமைப்பதற்கான ஒன்றிய அரசின் அனுமதிக்காக கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், கலைஞர் நினைவிட வளாகத்தில் ரூ.80 லட்சத்தில் அருங்காட்சியகம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்து இதற்கான ஒப்புதலை பெற மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை குழு ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. அங்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாநில கடலோர மண்டல மேலாண்மைக்குழுவுக்கு கருத்துரு பரிந்துரைக்கப்பட்டது.

இத்திட்டம் தொடர்பாக மாநில கடலோர மண்டல மேலாண்மைக்குழுவின் வல்லுநர், குழுவினர் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அருங்காட்சியகம்  திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : Coastal Regulatory Commission , Rs 80 lakh museum at former chief minister Karunanidhi's memorial: Coastal Regulatory Commission nods
× RELATED கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க...