×

மழையின்றி வனத்தில் வறட்சி துவக்கம் ஆனைமலை புலிகள் காப்பக வனத்தில் 250 கிமீ தீத்தடுப்பு கோடு அமைப்பு பணி

*வனத்துறையினர் நடவடிக்கை

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த, ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி, உடுமலை என இரண்டு வனக்கோட்டங்கள் உள்ளது. பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் டாப்சிலிப், மானாம்பள்ளி, வால்பாறை, பொள்ளாச்சி ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளடங்கியுள்ளது. இந்த வனப்பகுதிகளில் உள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  

இதனால், இங்குள்ள சுற்றுலா பகுதிகளில் ஆண்டுதோறும் வெளியூர் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும் போது வனம் பச்சை பசேல் என்று பசுமையாக இருக்கும். அதே நேரத்தில்  வெயிலின் தாக்கம் ஆரம்பிக்கும்போது வனத்தில் உள்ள மரக்கிளைகளில் இருந்து இலைகள் உதிர்ந்தோடுகிறது. வறட்சியால் நீர்ரோடைகள் வற்றிவிடுகிறது.
 கடந்த ஆண்டு(2022), மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழையும் அதன்பின் வடகிழக்கு பருவமழையும் சில மாதமாக தொடர்ந்து பெய்தது. இதன்காரணமாக, வனத்தில் உள்ள செடிக்கொடிகள், மரங்கள் பலமாதமாக பச்சை பசேலானது. இந்த நிலை கடந்த ஜனவரி மாதம் வரையிலும் நீடித்தது.

இதற்கிடையே, கடந்த இரண்டு மாதமாக போதிய மழையில்லாததால், வனப்பகுதியில் மீண்டும் வறட்சி ஏற்பட துவங்கியுள்ளது. தற்போது இரவு நேரத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதுடன், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால், பனிக்கும், வெயிலுக்கும் செடிக்கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்த நிலையை அடைந்தது.  
 இதில், வனத்தின் பல இடங்களில்,  வறட்சியால் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போது மீண்டும் வறட்சி துவக்கத்தால் பல மரங்களில் இருந்து இலைகள் உதிர துவங்கியுள்ளன. வனப்பகுதிகளில் தீ அபாயம் ஏற்பாடதவாறு இருக்க, வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகள் அமைக்க தீவிரம் காட்டியுள்ளனர்.  

பொள்ளாச்சி கோட்டத்தில் 4வனச்சரகங்களையும் சேர்த்து மொத்தமுள்ள சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு மேல் தீ தடுப்பு கோடு அமைக்கும் பணியிலும், சாலையோரமுள்ள அந்நிய களைசெடிகளை அகற்றும் நடவடிக்கையில்  வனத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனைலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி வனகோட்டத்திற்கு உட்பட்ட பகுதி கேரளா எல்லையை ஓட்டியுள்ளதால், இரு மாநில வனத்திலும்,  தீ தடுப்பு கோடு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வனப்பகுதியில் பல பிரிவுகளில் 3 மீட்டர் முதல் 6 மீட்டர் அகலத்துக்கு இடைவெளி விட்டு, தீ தடுப்பு கோடுகள் போடப்படுகிறது. இப்பணியில் வனச்சரகர்கள், வனகாப்பாளர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். இப்பணிகளை, ஆனைமலை புலிகள் காப்பக கள துணை இக்குனர் பா ர்கவேதேஜா நேரில் பார்வையிட்டு, வனத்துறையினருக்கு அறிவுரை வழங்குகிறார்.   

 இதுகுறித்து  வனத்துறையினர் கூறுகையில், ‘‘ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு பெய்த பருவழையால் வனத்தில் உள்ள மரங்கள் செழித்தது. நீரோடைகளில் தண்ணீர் ஓரளவு இருந்தது. ஆனால் இந்நிலை வெகுநாட்களாக நீடிக்கவில்லை. தற்போது மழை இல்லாததால், பல இடங்களில் தண்ணீர் வற்ற துவங்கியுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பனிப்பொழிவு அதிகமானதுடன்,  வெயிலின் தாக்கம் தற்போது அதிகமாக உள்ளது. கோடை காலம் இப்போதே  துவங்கப்பட்டுள்ளதுபோன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வனப்குதியில் தீ பரவுவதை தடுக்கும் விதத்தல் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி வனகோட்டத்தில் மட்டும் சுமார் 250 கிலோ மீட்டர் சுற்றளவு தூரம், மிகுந்த இடைவெளி விட்டு இந்த தீ தடுப்பு கோடு போடப்படுகிறது. மேலும் அந்நிய களைச்செடிகளும் அகற்றப்படுகிறது.   

 இந்த தீத்தடுப்பு கோடுகள் விலங்குகள் மட்டுமின்றி மனித உயிரினங்களுக்கும் பாதுகாப்பாக அமையும். பொள்ளாச்சி கோட்ட வனப்பகுதிகளில், மழைப்பொழிவின்றி வறட்சி ஏற்பட்டுள்ளதால், வனத்தை பாதுகாப்பதில் வனத்துறை மட்டுமின்றி மக்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுற்றுலா பகுதிகளுக்கு வரும் பயணிகள் தீ பொறி ஏற்படும் உபகரணங்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து பயணிகளுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு எற்படுத்தப்படுகிறது’’ என்றனர்.

Tags : Animalayan , Pollachi : Coimbatore, next to Pollachi, Anaimalai Tiger Reserve has two forest ranges, Pollachi and Udumalai.
× RELATED ஆனைமலை பகுதியில் குறுகலான சாலை...