சித்தூரில் ஆங்கிலேயர் ஆட்சியில் வழங்கப்பட்டது 7.5 ஏக்கர் விவசாய நிலத்தை கையகப்படுத்த அளவீடு செய்வதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சித்தூர் : சித்தூரில் 7.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்தூர் இருவாரம் கிராமம் அருகே எஸ்சி வகுப்பை சேர்ந்தவர்களின் 7.5 ஏக்கர் விவசாய நிலத்தை மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று கையகப்படுத்த  வந்தனர். இதனை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, அப்பகுதிமக்கள் கூறியதாவது:

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சியில் விவசாயம் செய்து கொள்ள 7.5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அதற்கான பத்திரங்கள் அனைத்தும் எங்களிடம் உள்ளது. இங்கு மாங்காய் செடிகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் விவசாயம் செய்யாமல் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வேர்க்கடலை விவசாயம் செய்து வந்தோம்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மண்டல வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து அளக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இந்த நிலம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றனர். இதுதொடர்பாக மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது மண்டல வருவாய்த்துறை அதிகாரி பார்வதியம்மா போலீசாருடன் வந்து எங்கள் நிலத்தை அளக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கு பின்னணியில் எம்எல்ஏ ஜங்காளப்பள்ளி சீனிவாசலு செயல்பட்டு வருகிறார். அவர் சொந்த ஊரான ஜங்காளப்பள்ளி கிராமம் அருகே 30 ஏக்கரை ஆக்கிரமித்துள்ளார். அந்த நிலத்திற்கு பைபாஸ் சாலையாக வழி வேண்டும். இதனால், எங்கள் நிலத்தை கையகப்படுத்தி கொண்டால் குறுகிய நேரத்தில் பைபாஸ் சாலையை கடந்து விடலாம். இதற்காக எம்எல்ஏ அதிகாரிகளை தூண்டிவிட்டு இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Related Stories: