×

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மயான பூமிகளில் தினசரி தூய்மை பணி: மேயர் பிரியா உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மயான பூமிகளில் தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயான பூமிகளில் கட்டணமில்லா சேவைகளை உறுதிப்படுத்துதல்,  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி நவீன முறையில் அழகுப்படுத்தி பராமரித்தல், தொடர்பான ஆய்வுக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகை  கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேயர் பிரியா கூறியதாவது:  

சென்னையில் மாநகராட்சிக்கு சொந்தமான  209  மயான பூமிகள் உள்ளன.  இவற்றில் உடல்களை எரித்தல் மற்றும் புதைத்தல் சேவைகள் மாநகராட்சியால் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சேவையை அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும்.  மயான பூமிகளில் நாள்தோறும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மயான பூமிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பணிகளை மேற்கொள்ளவும், தன்னார்வ அமைப்புகள்  பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.

இந்த மயான பூமிகளில் சேவைகள் இலவசமாக வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் அதற்கான அறிவிப்பு பலகைகளை மயான பூமிகளின் நுழைவாயிலில் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும்படி வைக்க வேண்டும். இதுகுறித்த தகவல்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மயானபூமியில் நுழைவுப் பகுதியை அழகுபடுத்தி, உட்புறங்களில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும்.  இங்கு வரும் பொதுமக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.  மேலும், கழிப்பறை பயன்பாடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.  இப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தவிர்க்கும் வகையில் அலுவலர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மயான பூமிகளின் பயன்பாடுகளுக்காக தனி செயலி உருவாக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மயான பூமிகளை  பசுமையாக பராமரிக்கும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், நீரூற்றுகள் அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட வேண்டும்.  இந்தப் பணிகள் அனைத்தையும் மார்ச் மாத இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரவு நேரங்களில் ஒரு பாதுகாவலரை நியமித்தல், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வட்டார துணை ஆணையாளர்கள் ஷேக்அப்துல் ரஹ்மான், அமித், சிவகுரு பிரபாகரன், தலைமைப் பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், மாநகர நல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Chennai Corporation ,Mayor ,Priya , Daily cleaning work in graveyards under Chennai Corporation: Mayor Priya orders
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!