×

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்பு; பலி எண்ணிக்கை 20,000ஐ தாண்டியது: துருக்கி அதிபர் நேரில் பார்வை

காசியான்டென்: நிலநடுகத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. பலியானோரின் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனிடையே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துருக்கி அதிபர் நேற்று நேரில் பார்வையிட்டார். துருக்கி மற்றும் சிரியா எல்லையையொட்டி அமைந்த பகுதிகளில் திங்களன்று பயங்கர நிலநடுக்கமும் அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நிலஅதிர்வுகளும் ஏற்பட்டது.
வரலாறு காணாத நிலநடுக்கத்தினால் துருக்கி புரட்டிப்போடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமானதால் பொதுமக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. துருக்கியில் 13,400 பேர் பலியாகி உள்ளனர். 60ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இதேபோல் சிரியாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 4,100 ஆக அதிகரித்துள்ளது.

5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. சம்பவம் நிகழ்ந்து 3 நாட்கள் கடந்துவிட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்களை உயிரோடு மீட்பதற்கான நம்பிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில் துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டோகன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட காசியான்டென், ஒஸ்மானியே மற்றும் கிலிஸ் மாகாணங்களில் நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சிறையில் 3 பேர் பலி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹடாய் மாகாணத்தில் உள்ள சிறையில், கைதிகள் சிலர் தப்பிக்கும் நோக்கத்தில் சிறைக்கு தீ வைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து சிறை அதிகாரிகள் அவர்களை தடுக்கும் முயற்சியின்போது கலவரம் வெடித்தது. இதில் 12 பேர் காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றக்கோரியும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தங்களது குடும்பங்களை குறித்த தகவல்களை கேட்டு இதுபோன்று நடந்து கொண்டதாகவும் சில செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியா இரங்கல்: நிலநடுக்கத்தால் சீரழிந்துள்ள துருக்கிக்கு வடகொரியா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் வெளியுறவு துறை அமைச்சர்  சோ சுன் ஹூய் துருக்கி வெளியுறவு துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள செய்தியில், ‘‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் சிரியாவிற்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பிய செய்தியில், ‘‘அதிபர் அசாத் தலைமையின் கீழ் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து விரைவில் மீண்டு எழும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை, மகள் உயிருடன் மீட்பு: அன்டாக்கியாவில் இளம்பெண் ஒருவர் உயிரோடு மீட்கப்பட்டார். இரண்டு மணி நேரத்துக்கு பின் காயமடைந்த  அவரது தந்தையையும் மீட்பு குழுவினர் உயிரோடு மீட்டனர். அப்போது மீட்பு குழுவினர் அவரது மகள் உயிரோடு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு அவர் நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார்.   பேரிடர் மேலாண்மை ஏஜென்சியின் தகவலின்படி, துருக்கியில் 1,10,000க்கும் மேற்பட்டோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர்கள், கிரேன்கள், புல்டோசர் என சுமார் 5500 வாகனங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.


Tags : Continued recovery of bodies from rubble in earthquake-affected areas; Death toll surpasses 20,000: Turkish president's first-hand view
× RELATED 58 வயதில் 3வது முறையாக சுனிதா...