ராகுல் சரியாகத்தான் பேசினார் அதானி, அம்பானியுடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னை இல்லை: மக்களவையில் அதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சு

புதுடெல்லி: அதானி, அம்பானியுடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இல்லை. இந்த விவகாரத்தில் ராகுல் சரியாகத்தான் பேசினார் என்று அதிர்ரஞ்சன் சவுத்திரி பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் மீது மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் குழு தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி பங்கேற்று பேசியதாவது:

நாடு வளர்ச்சியடைய வேண்டும். மேலும் பல தொழிலதிபர்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.   நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். அதானி , அம்பானியுடன் எங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் இல்லை. 2014ம் ஆண்டு பாஜ  ஆட்சிக்கு வந்த பிறகு அதானியின் சொத்து மதிப்பு விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 609 வது இடத்தில் இருந்து  இரண்டாவது இடத்திற்கு உயர்ந்ததாக ராகுல் காந்தி பேசியது சரியாகத்தான் கூறினார். அவரது அம்பு சரியான இலக்கைத் தாக்கியுள்ளது. அவரை பப்பு என்று முத்திரை குத்த முயன்றார்கள். இப்போது அவர்களே பப்புவாக மாறிவிட்டார்கள்.  

(அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, ‘  மாண்புமிகு எம்பி (ராகுல் காந்தி)யை நீங்கள் பப்பு என்று அழைக்க முடியாது’ என்றார். அப்போது பா.ஜ எம்பிக்கள் மேஜையை தட்டி சிரித்தனர். )

ராகுல் காந்தி பேசிய விவகாரங்கள் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகின்றன . அதானி குழுமத்தை பா.ஜ. பாதுகாக்கிறது. கடந்த காலங்களில் ஒரு தொழிலதிபரை பாதுகாக்க ஆளும் கட்சி முன்வந்ததில்லை. இதுவரை யாரும் ஜனாதிபதியின் மதம் அல்லது ஜாதி பற்றி பேசாததால், அரசியல் ஆதாயங்களுக்காக முர்முவை ஜனாதிபதியாக பா.ஜ மாற்றியதா?என்றார்.

Related Stories: