புழல் சிறையில் பரபரப்பு: சிறை காவலரை மிரட்டிய கைதி

புழல்: புழல் சிறையில் வரிசையில் வரச்சொன்னதால் கைதி ஒருவர், சிறை காவலருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புழல் விசாரணை சிறையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அந்தந்த அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு கணக்கு எடுக்கும் பணியில் சிறை காவலர்கள் ஈடுபட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று காலையில் சிறையில் உள்ள ஒரு அறையில் ஒரு கைதியை வரிசையில் வருமாறு சிறை காவலர் வடிவேல் கேட்டுக்கொண்டார். அப்போது சிறையில் உள்ள கைதி, ‘நான் இதே பகுதியை சேர்ந்தவன், நான் வெளியில் வந்தவுடன் கொலை செய்து விடுவேன்’’ என மிரட்டி உள்ளான். இதனால் அதிர்ந்துபோன சிறை காவலர் வடிவேல், சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சிறை அலுவலர் பொறுப்பு ராஜசேகரன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்ததில் மிரட்டல் விடுத்த கைதி புழல் திருநீலகண்ட நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (30), ராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 160 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் கடந்த 2022 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என தெரிய வந்தது.  இவர் மீது சிறை அலுவலர் பொறுப்பு ராஜசேகரன் புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: