சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத டபுள் டக்கர் இ-பஸ் சேவை ஐதராபாத்தில் தொடக்கம்: பயணிகள் உற்சாகம்

திருமலை: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் டபுள் டக்கர் இ-பஸ் சேவை தெலங்கானாவில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் சிலர், ‘ஐதராபாத்தில் டபுள் டக்கர் பஸ்கள் இயக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு அமைச்சர், ‘உரிய ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருந்தால் நிறைவேற்றப்படும்’ என பதிலளித்திருந்தார். அதன்படி அமைச்சர் தனது இலாகா அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டங்கள் நடத்தினார்.

அதன்படி ஐதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் 6 மின்சார இரட்டை அடுக்கு பஸ்களை (டபுள் டக்கர் இ-பஸ்) இயக்க அனுமதி அளித்தது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐதராபாத்தில் உள்ளூர் பயன்பாட்டுக்காக மொத்தம் 6 மின்சார இரட்டை அடுக்கு பஸ்கள் இயக்கப்படும். அதில் 3 பஸ்கள் முதற்கட்டமாக இயக்கப்படுகிறது. மற்றவை விரைவில் இயக்கப்படும். மின்சார பேட்டரியில் இயங்கக்கூடிய இந்த டபுள் டக்கர் பஸ்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பஸ் போக்குவரத்தை நேற்று ஐதராபாத்தில் அமைச்சர் கே.டி.ராமாராவ், தலைமை செயலர் சாந்திகுமாரி உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்து பயணம் செய்தனர். மேலும் பயணிகள் பலரும் உற்சாகமாக பயணித்தனர். சிறப்பு அம்சங்கள்: உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி ஐதராபாத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அவற்றில் பாரம்பரிய சின்னங்கள் வரையப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் டிரைவருடன் சேர்த்து 65 பேர் அமரலாம். முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிமீ வரை பயணிக்க முடியும். சுமார் 2 முதல் 2.30 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஒவ்வொரு பஸ்சின் விலை ₹2.16 கோடி ஆகும். அடுத்த பஸ் நிறுத்தம் குறித்த அறிவிப்பு, தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது.

Related Stories: