சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முற்றுகையால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைப்பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தற்போது தேர்தல் பிரசாரங்கள் அங்கு சூடுபிடித்துள்ளது. முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முற்றுகையிட தொடங்கி விட்டனர்.
வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 96 வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இன்று மாலை எந்தெந்த கட்சி சார்பில் யார் யார் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்பது அறிவிக்கப்பட்டு விடும். இதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் களமே ஈரோடு கிழக்கு தொகுதியை மையப்படுத்தி சுழன்று கொண்டு இருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. திருமகன் ஈவெராவின் தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ். இளங்கோவனை வேட்பாளராக அக்கட்சி நிறுத்தி இருக்கிறது.
திமுக கூட்டணி கட்சிகளுடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளது. அதிமுக சார்பாக யார் போட்டியிடுவது என்ற பெரிய குழப்பம் நிலவி வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காததாலும், பாஜக கேட்டுக் கொண்டதால் அவர் தற்போது வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார்.
இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அவர் நேற்று வேட்பு மனுவும் தாக்கல் செய்துவிட்டார். அதோடு தொகுதியில் நேற்று தனது பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார். இந்நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அறிவித்தார். தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்றிணைத்து இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்ற பாஜகவின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதனால் சசிகலா, டிடிவி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பாஜ தரப்பு எந்தவித அழைப்பும் விடுக்காதது அவர்களுக்கு கூடுதல் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் டிடிவி.தினகரன் தனது கட்சியும் போட்டியிடாது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, இந்த இடைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்து விட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அறிவித்துவிட்டது. பாஜகவும் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. தேமுதிக தனித்து போட்டியிடுவதாக கூறி தனது வேட்பாளரையும் அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இதனால் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுவும் தாக்கல் செய்து விட்டனர். இதனால் இந்த இடைத் தேர்தலில் கிட்டத்தட்ட திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தேமுதிக, நாம் தமிழர் என தற்போது 4 முனை போட்டியாக மாறி உள்ளது. தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பே திமுக சார்பில் கை சின்னத்துக்கு ஆதரவு கேட்டு திமுகவினர் பிரச்சாரத்தை தொடங்கியதால் அப்போதிருந்தே தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியது. மேலும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று, அதிமுகவும் 100க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளனர். அவர்களும், தென்னரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்ைத தொடங்கிவிட்டனர்.
மேலும் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் திருவிழா போன்று காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவர் தொகுதிக்குட்பட்ட 19 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.
அதேபோன்று, அமைச்சர் உதயநிதியும் பிப்ரவரி 19 மற்றும் 20ம் தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அதிமுக கூட்டணி சார்பில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தென்னரசுவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்கான பிரச்சார திட்டங்களை வகுத்து வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3 தேர்தல்களை சந்தித்த தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போது தான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த தொகுதியில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.