தேனி : தேனி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளிக்கு ஆடிட்டோரியம் மற்றும் மாணவர் விடுதி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.தேனி நகரில் அரசினர் தொழிற் பயிற்சி பள்ளியான ஐடிஐ கடந்த 1966ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப தனித்தனியாக ஐந்து ஒர்க் ஷாப்புகள், இரண்டு லேபுகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஐடிஐ துவங்கும்போது வெல்டர், பிட்டர், டர்னர், எலெக்ட்ரிசியன் மெக்கானிக், மெக்கானிக் கிரைண்டர், எம்ஆர் மற்றும் டிவி உள்ளிட்ட 7 டிரேடுகளை கொண்ட பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. தற்போது பம்ப் ஆப்ரேட்டர், மெக்கானிக் டிராக்டர், கோபோ, டிடிபிஓ என 11 பாடப் பிரிவுகளின் கீழ் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
தேனி அரசு ஐடிஐ துவங்கப்பட்டு தற்போது வரை இங்கு சுமார் 19,500 பேர் பல்வேறு பாடப்பிரிவுகளில் பயின்று தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு, தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் பலர் ஓய்வு பெற்றுள்ளனர்.
இத்தகைய அரசு ஐடிஐயில் ஆண்டுதோறும் தேசிய அளவிலான ஆல் இந்தியா ட்ரேட் டெஸ்ட் எனப்படும் என்டிசி சான்றிதழுக்கான தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய என்டிசி சான்றிதழ் பெறக்கூடிய பயிற்சியாளர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணி பெறுவதற்கு தகுதி வாய்ந்தவையாக உள்ளது.
இப்பயிற்சி நிலையத்தில் மாணவர்களின் தனித் திறனை வளர்க்கும் வகையில் பல்வேறு வகையான திறன் வளர்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் மத்தியில் சமூக அக்கறை ஏற்படுத்தும் வகையில் ரத்ததான முகாம், போதை விழிப்புணர்வு முகாம் உள்ளிட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அரசு பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு அரசு 4.0 திட்டத்தின் கீழ் ரூ.31 கோடி மதிப்பீட்டில் தற்போது பத்தாயிரத்து ஐநூறு சதுர அடி பரப்பளவில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி நவீன இயந்திரங்களைக் கொண்ட ரோபோடிக் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் துவங்குவதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இதில் ரூ.3 கோடியே 70 லட்சம் அளவிற்கு கட்டிடம் கட்டியது போக மீதம் உள்ள தொகையில் பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில்கூட இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரசினர் ஐடிஐயாக உருவெடுத்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த அரசு ஐடிஐயில் கடந்த 1999ம் ஆண்டு வரை மாணவர் விடுதி செயல்பட்டு வந்தது. மதுரை மாவட்டத்திலிருந்து தேனியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவானபோது தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செயல்படுத்துவதற்கு ஐடிஐயின் மாணவர் விடுதி பெறப்பட்டு அங்கு மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டி முடித்ததும் இதே கட்டிடத்தில் மாவட்ட போலீஸ் எஸ்பி அலுவலகம் செயல்படுத்தப்பட்டது.
மாவட்ட போலீஸ் அலுவலகமும் புதிதாக கட்டப்பட்ட பின்பு ஐடிஐ இடம் மாணவர் விடுதியை ஒப்படைக்க ஐடிஐ நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. ஆனால் இதுவரை மாவட்ட போலீஸ் எஸ்பி கட்டுப்பாட்டில் உள்ள பழைய விடுதி ஐடிஐ நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அரசு ஐடிஐயில் மாணவர் விடுதி இல்லாத நிலை நீடித்து வருகிறது.
வருசநாடு, கம்பம், போடி மெட்டு, கம்பம் மெட்டு என சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பயிற்சி நிலையத்தில் வந்து பயின்று வருகின்றனர். தற்போது இந்நிலையத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வரும் நிலையில் ஏராளமான மாணவர்கள் வெளியே வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி பயின்று வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி விரைவில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கைவசம் வைத்துள்ள பழைய மாணவர் விடுதியை முழுமையாக அரசு ஐடிஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஐடிஐ நிர்வாகம் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் அரசு ஐடியில் ஆண்டுதோறும் 600க்கும் மேற்பட்டோர் படித்து முடித்து பட்டம் பெறும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. இத்தகைய பட்டமளிப்பு விழா நடத்தும் போது இதற்கான தனி கூட்ட அரங்கம் இதுவரை கட்டப்படவில்லை. இதனால் பட்டமளிப்பு விழா நடத்தப்படும் போது அதற்கான அங்கிகள் அணிந்த பயிற்சி பெற்றவர்கள் தனித்தனி அறைகளில் அமர வைக்கப்பட்டு பட்டங்கள் வழங்கப்படும் அவல நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் இப்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவர்களை பணிக்கு தேர்வு செய்ய நிறுவனங்கள் உள்வளாக தேர்வு நடத்தும் போதும் இதற்கான தனி அரங்கம் இல்லாமல் மிகவும் சிரமப்படக்கூடிய நிலை உள்ளது.
எனவே தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆடிட்டோரியம் எனப்படும் பிரமாண்டமான ஒரு கூட்ட அரங்கம் அமைக்கப்பட வேண்டும். இதை சுமார் 4000 சதுர அடி பரப்பில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் வளர்ச்சியில் அக்கறை காட்டி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 4.0 திட்ட தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து வரும் தமிழ்நாடு அரசு, தேனி அரசு ஐடிஐயில் ஆடிட்டோரியம் அமைப்பதற்கு அனுமதி அளித்து இதற்கான நிதி ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை பயிற்சியாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
