×

குன்னூரில் புடவை, சால்வையில் பழமை மிக்க பாறை ஓவியம் வரைந்து அசத்தும் பழங்குடியின பெண்கள்

குன்னூர் : பெண்கள் அணியும் புடவை, சால்வையில் பழமை மிக்க பாறை ஓவியங்களை குன்னூர் பழங்குடியின பெண்கள் வரைந்து அசத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், பணியர், இருளர், குரும்பா, காட்டு நாயக்கர் என இந்த 6 வகை பழங்குடி மக்கள் இன்றளவும் இயன்றவரை தங்களின் பாரம்பரியங்களை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் இருளர், குரும்பர் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் மூதாதையர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாறை ஓவியங்களை வரைந்துள்ளனர். இயற்கையில் கிடைக்க கூடிய தாவரங்கள்‌ கொண்டு வாழ்க்கை முறை, விவசாயம் குறித்து ஓவியங்களை வரைந்துள்ளனர்.

இந்நிலையில் குன்னூர் புதுக்காடு குரும்பர் கிராமத்தில் பழங்குடியின பெண்கள் தற்போது, தனியார் அறக்கட்டளை மூலம் அளித்துவரும் டெய்லரிங் பயிற்சியில் புடவை சால்வை உள்ளிட்ட துணி வகைகளில் பாரம்பரிய ஓவியங்கள் வரைந்து வருகின்றனர். இதேபோல ஹெட்போன் கவர்களாக தைக்கும் துணியிலும் பாரம்பரிய ஓவியம் வரைகின்றனர். இதில் பாறை ஓவியங்களில் வரையப்பட்டுள்ள தேன் எடுப்பது, விவசாயம் செய்வது, இயற்கை வளங்கள் என பலவற்றையும் வரைந்து அசத்தி வருகின்றனர். ஏற்கனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ள நிலையில் மாற்று பயன்பாடான துணி பைகளில் இந்த ஓவியங்கள் வரைவது தனிச்சிறப்பு. இதையடுத்து பழங்குடியின மகளிருக்கு இடவசதி ஏற்படுத்தி கொடுப்பதுடன், நிதியுதவி அளித்து தொழில் மேம்பாடு அடைய செய்து வாழ்வாதாரத்தை உயர்த்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழங்குடியின கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Coonoor , Coonoor: Tribal women of Coonoor have painted ancient rock paintings on saris and shawls worn by women.
× RELATED தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில்...