போடி அருகே கிணற்றில் வீசி 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை முயற்சி

போடி: போடி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் அருகே பொட்டிபுரம் இந்திரா காலனியை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவரது மகன் ராமராஜ் (31). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வீரமணி (24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு மகன் ராஜபாண்டி (6), மகள்கள் ஈஷா (3), ஜீவிதா(2). ராமராஜ் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் உடுப்பஞ்சோலை காரிதோடு பகுதியில் தங்கி ஏலத்தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். தம்பதிக்குள் அடிக்கடி குடும்பத்தகராறு வருவதும், மனைவி கோபித்துக் கொண்டு போவதும், பின்னர் ராமராஜ் சென்று அழைத்து வருவது வாடிக்கையாக நடந்து வந்தது.

நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராமராஜ், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் சென்றார். அங்கு 85 அடி ஆழ கிணற்றில் 3 குழந்தைகளை தூக்கி போட்டார். பின்னர் கணவன், மனைவி இருவரும் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்தவர்கள் போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ராமராஜ், அவரது மனைவி வீரமணி, மகன் ராஜபாண்டி ஆகியோரை காப்பாற்றினர். இதில் ராமராஜ்க்கு கால் மற்றும் முகம் சிதைந்தும், வீரமணிக்கு இடுப்பு  உடைந்தும், ராஜபாண்டிக்கு தலை உட்பட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதால், தேனி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குழந்தைகள் ஈசாவும், ஜீவிதாவும் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: