லாரியுடன் பறிமுதலான 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் கிட்டங்கியில் ஒப்படைப்பு-தலைமறைவானவரை தேடும் போலீசார்

கம்பம் : உத்தமபாளையம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்று லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட 17 டன் ரேஷன் அரிசி அரசு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் இருவர் கைதான நிலையில் தலைமறைவான முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு. தமிழக ரேஷன் அரிசியை கிலோ ரூ.16 முதல் 25 வரை அங்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பல்வேறு வழிகளில் ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது வாடிக்கையாக உள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வருவாய்த்துறையினர் பறக்கும் படை, ஃபுட் செல் போலீசார் ஆகியோர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தும் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்கதையாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் உத்தமபாளையம் ஃபுட்செல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் குமுளி செக்போஸ்டில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 50 கிலோ மூட்டையாக 340 ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 17 டன் எடையுள்ள இந்த ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு உத்தமபாளையம் ஃபுட் செல் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் லாரியை ஓட்டி வந்த பாலக்காடு வாளையார் பகுதியைச் சேர்ந்த முகமது மகன் ஜான்பாஷா (33), அவருடன் இருந்த மதுரை தெற்குவெளி வீதியைச் சேர்ந்த பிச்சைமணி நாயுடு மகன் சீனிவாசன்(54) ஆகியோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான பாலாசிங் என்பவரை உத்தமபாளையம் ஃபுட் செல் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் உத்தமபாளையம் கிட்டங்கியில் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: