×

வீட்டின் பின்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்தனர் சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் 44 சவரன் திருட்டு

*அரக்கோணம் அருகே மர்ம நபர்கள் கைவரிசை

அரக்கோணம் : அரக்கோணம் அருகே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் 44 சவரன் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன்(50). இவர், சென்னையில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது, மனைவி உமா(50). இவர், முருங்கை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வழக்கம் போல் நேற்று காலை பணிக்கு சென்றுள்ளனர். பின்னர், பள்ளி வேலை நேரம் முடிந்ததும் மாலை உமா வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், பீரோவில் இருந்த நகைகளை சரிபார்த்தபோது அதில்  வைக்கப்பட்டிருந்த சுமார் 44 சவரன் நகை மற்றும் ₹1000த்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தக்கோலம் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அரக்கோணம் ஏஎஸ்பி அசோக்கிரீஸ் யாதவ், அரக்கோணம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் பழனிவேல், தக்கோலம் போலீஸ் எஸ்ஐ சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், பட்டப்பகலில் துணிகரமாக வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு  உடைத்து உள்ளே வந்து நகை, பணம் போன்றவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தக்கோலம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக குற்றவாளிளை பிடிக்க தனிப்படைகள்  அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Chennai Water and Drainage Board ,Officer , Arakkonam: Police are looking for the mysterious persons who stole 44 pieces of jewelery and money from the house of a drinking water drainage board officer near Arakkonam.
× RELATED மராட்டிய மாநில பாஜக தேர்தல்...