×

வத்தலக்குண்டு அருகே மருதாநதி ஆற்றின் மேல் ரூ.1 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி ‘படு ஸ்பீடு’-மகிழ்ச்சியில் பொதுமக்கள்

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு அருகே மருதாநதி ஆற்றின் மேல் ரூ. 1 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வத்தலக்குண்டு அருகே குளிப்பட்டியையொட்டி மருதாநதி ஆறு ஓடுகிறது. தாண்டிக்குடி மலைப்பகுதியிலிருந்து வரும் தண்ணீர் அய்யம்பாளையம் அருகே மருதாநதி அணையில் தேக்கப்படுகிறது. 72 அடி உயரம் கொள்ளளவு கொண்ட அணையின் உபரிநீர் மருதாநதியாக அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, வெங்கிடாஸ்திரி கோட்டை வழியாக வந்து குளிப்பட்டியை கடந்து கூட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையாறு, மஞ்சளாறு ஆகியவற்றோடு ஒன்றாக கலக்கிறது.

இதனை தொடர்ந்து மலைப்பகுதியில் ஊற்று கோடைகாலத்தில் மட்டுமே வற்றுவதால் மற்ற நாட்களில் ஊற்றில் எப்போதும் தண்ணீர் வருவதால் மருதாநதி ஆற்றில் பெரும்பாலான நாட்களில் தண்ணீர் சென்று கொண்டே இருப்பது வழக்கம்.இந்நிலையில் மருதாநதி ஆற்றில் தண்ணீர் செல்லும் போது குளிப்பட்டி, கோம்பை பட்டி, குறும்பட்டி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் மீனாட்சிபுரம் கே.உச்சபட்டி சமத்துவபுரம், சின்னுபட்டி, கரட்டுப்பட்டி உள்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் வெங்கடாஸ்திரிகோட்டை, எம்.குரும்பப்பட்டி வழியாக 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதேபோல விவசாய விளை பொருட்களை கொண்டு செல்ல பணவிரயமும், கால விரயமும் அதிகளவில் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குளிப்பட்டி அருகே மருதாநதி ஆற்றின் மீது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

அப்பகுதி மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக ஆட்சிகாலத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். 10 வருட அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்து வந்தனர். இதனை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அந்த வகையில் இப்பகுதி மக்கள் மீண்டும் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் மற்றும் அதிகாரிகள் அதனை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பலனாக சில மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி மேம்பாலம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து மேம்பாலம் அமைக்கும் பணி 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி மும்முரமாக நடந்து வருகிறது. ஆற்றில் தண்ணீர் வந்த போதும் இடைவிடாமல் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பாலத்தின் பணிகள் இரண்டு மாதங்களில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேம்பாலம் அமைக்கும் பணியைஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன், துணைத் தலைவர் முத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார், இந்திராணி, உதவி பொறியாளர்கள் டெல்லி ராஜா, பிரிட்டோ சகாயராஜ் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கடந்த நூற்றாண்டில் விடுத்த கோரிக்கை இப்போது நிறைவேறி இருக்கிறது. மேம்பாலத்தில் விரைவில் செல்லப்போவதை நினைக்கும்போது இப்போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் விவசாயம் பெருகும். தொழில் சிறப்படையும். தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் மு.கஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்’’என்றார்.

Tags : Padu Speed ,Joy ,Marudanathi River ,Vathalakkund , Vatthalakundu : Near Vatthalakundu above the river Marudhanadi Rs. 1 crore as the work of constructing the flyover is in full swing
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.29-ம்...