நெல்லிக்குப்பம் அருகே துணிகரம் ஆஞ்சநேயர் கோயிலில் நகை, பணம் கொள்ளை

*மர்மநபர்களுக்கு போலீசார் வலை

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்த சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  நெல்லிக்குப்பம் அருகே டி. குமராபுரம் பகுதியில் 41 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற காரிய சித்தி ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் கடலூரில் இருந்து பண்ருட்டி செல்லும் சாலையின் ஓரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் காலையிலிருந்து மாலை வரை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் திருமஞ்சனம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

 மேலும் சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் முதல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் செல்லும் காரியம் கை கூட வேண்டும். விபத்துகள் நேரிடாமல் பாதுகாக்க வேண்டும் என இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வது வழக்கம். இந்த கோயிலில் பார்த்தசாரதி குருக்கள் சுவாமிக்கு தினமும் சிறப்பு பூஜை செய்து வந்தார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு கோயிலில் பூஜைகள் முடிந்ததும் கோயில் கதவை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார்.

 இந்நிலையில் நேற்று அதிகாலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் கோயில் அர்ச்சகர் பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் பார்த்தசாரதி விரைந்து வந்து பார்த்ததில் கோயில் கதவு உடைக்கப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமியின் தலையில் உள்ள வெள்ளி சடாரி மற்றும் வெள்ளி தீர்த்தக் கிண்ணம், சுவாமியின் நெற்றியில் உள்ள ஒன்றரை பவுன் தங்க நாமம் மற்றும் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரொக்கப்பணம் ரூ.15 ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுதவிர சிறிய உண்டியலும் திருட்டு போய் உள்ளது. கொள்ளை போன நகைகள், பணம், வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும்.

 இதுகுறித்து கோயில் தர்மகர்த்தா லட்சுமிநாராயணன் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயில் பூட்டை உடைத்து தங்க நகை மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இக்கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி கோயில் கதவை உடைத்து 150 கிராம் மதிப்புள்ள வெள்ளி பூணூல் திருடு போனது குறிப்பிடத்தக்கது.

Related Stories: