×

வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

வடலூர்: வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையில் நேற்று நடந்த தைப்பூச விழாவில், 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும். இந்த ஆண்டு 152வது தைப்பூசவிழா நேற்று நடந்தது. முன்னதாக கடந்த மாதம் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது. 31ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் காலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழியிலும் வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்திலும், தருமசாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது. சத்திய ஞான சபையில் காலை 10 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து சத்தியஞான சபையில் நேற்று காலை 6 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

தரிசனத்தின்போது சன்மார்க்க அன்பர்களின், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஒலித்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். மேலும் விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்பட்டன.

தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நாளை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்திப்பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது.


Tags : Vadalur Vallalar ,Satya Gnanasabha , Jyoti darshan with 7 veils removed at Vadalur Vallalar Satya Gnanasabha: Lakhs of devotees worship
× RELATED வடலூர் வள்ளலார் சபைக்கு சொந்தமான...