*விளை நிலத்தை உழுது தயார் செய்யும் பணி மும்முரம்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் தென்மேற்கு பருவ மழையை எதிர்நோக்கி விவசாயிகள் விளை நிலத்தை உழுது தயார் செய்யும் பணிகளி மும்முரமாக ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் கிராமங்களே அதிகம் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி மற்றும் காய்கறி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில், ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களிலும், ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கோடை மழை இருக்கும்போதும் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.
அதிலும், சித்திரை, ஆடி, கார்த்திகை மற்றும் தைப்பட்டம் என அடுத்தடுத்து பயிர் வகைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடி அதிகமாக இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழையும். அதன் பின்னர் அக்டோபர் இறுதி மற்றும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் வடகிழக்கு பருவமழையும் ஓரளவு பெய்துள்ளது. அதன்பின், ஜனவரி இறுதிவரை பனிப்பொழிவால், விவசாய நிலங்களில் ஈரப்பதம் அதிகளவு இருந்துள்ளது. இதனால், அந்நேரத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைகேற்ப பயிர் வகைகளை பயிரிட்டுள்ளனர்.
ஆனால் அதன்பின், இந்த ஆண்டில் கடந்த பிப்ரவரி துவக்கத்தில் இருந்து மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகமானது. மேலும், சில மாதமாக கோடை வறட்சியால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் போதிய பயிர் விதைப்பு மேற்கொள்ள முடியாமல் தவித்தனர். ஏப்ரல் மாதம் இறுதியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மட்டும் சில நாட்கள் அவ்வப்போது கோடை மழை பெய்தது. மே மாதம் துவக்கம் வரை சமவெளிப்பகுதிகளில் மழையில்லாததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இந்நிலையில், சில மாதத்திற்கு பிறகு மூன்று வாரத்துக்கு முன்பு கோடை மழை பெய்ய துவங்கியது. சில நாட்கள் கன மழையாக இடியுடன் பெய்துள்ளது. சுமார் 2 வாரத்துக்கு மேலாக தினமும் பல மணிநேரம் கோடை மழை பெய்தது. சில நாட்களில் விடிய விடிய மழை பெய்ததால் விவசாய நிலங்களில் ஈரப்பதம் மீண்டும் அதிகரித்தது. இதன் காரணமாக, கடந்த சிலநாட்களாக விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மானாவாரி மற்றும் காய்கறி சாகுபடிக்கு உழவு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கோடை மழை பெய்த நாட்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பல நாட்கள் விடிய விடிய பல மணிநேரம் மழை பெய்ததுடன், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும், கோடை மழையை தொடர்ந்து அடுத்து தென்மேற்கு பருவமழை மழைப்பொழிவு இருக்கும் என்ற நம்பிகையில் விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிவர்த்தியானதால், பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகள் மானாவாரி பயிர் சாகுபடிக்கு செய்ய, அடுத்து தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
The post பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் தென்மேற்கு பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.