×

போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

போடி: போடி மெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் ஒற்றைப் புலி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், போடி மேற்குதொடர்ச்சி மலையில் தமிழக-கேரளா மாநிலங்களை இணைக்கும் போடி மெட்டு பகுதி உள்ளது. இப்பகுதியில் தமிழக விவசாயிகள் ஏலத்தோட்டம் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். குறிப்பாக கேரளா பகுதியான பியல்ராவ், சுண்டல், தோண்டிமலை, கோரம்பாறை, மூலத்துறை, யானை இரங்கல், தலகுளம், முதுவாக்குடி, சூரியநல்லி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் ஏலத்தோட்டம் விவசாயம் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக யானை இரங்கல் அணையை மையமாகக் கொண்டு 13க்கும் மேற்பட்ட யானைகள் தோட்ட தொழிலாளிகளுக்கு பல்வேறு தொந்தரவுகளை செய்து வருகின்றன. நேற்று காலை பியல்ராவ் கள்ளிப்பாறை அருகே சிகரெட் கொம்பன் யானை தாழ்வாக சென்ற மின்வயரை தும்பிக்கையால் தொட்டு சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி பலியானது குறிப்பிடதக்கது. இந்நிலையில், யானை நடமாட்டத்தை தொடர்ந்து, தற்போது இப்பகுதியில் ஒற்றை புலி நடமாட்டம் அதிகரித்துள்ளது.

போடிமெட்டு-மூணாறு சாலையிலும், தேயிலை மற்றும் ஏலத்தோட்ட பகுதியிலும் ஒற்றைப்புலி அடிக்கடி சுற்றி வருகிறது. இதனால் இப்பகுதியில் டூவீலரில் செல்பவர்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். தேயிலை, ஏலத்தோட்டங்களில் ஒற்றை புலி நடமாட்டத்தால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags : Podimetu , Tiger movement in tea garden near Podimetu: Public fear
× RELATED போடி அருகே குரங்கணி பிரிவில் சாலை...