இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

ராமேஸ்வரம்: இலங்கை புங்குடுதீவு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நேற்றிரவு தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி பிரச்னை சீரடையாத நிலையில் இலங்கை தமிழர் அகதிகளாக புலம்பெயர்ந்து வருவது தொடர்கிறது. இலங்கை புங்குடுதீவு பகுதியை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்றிரவு அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவு குறிகட்டுவான் சாலை பகுதியை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (44), இவரது மனைவி மாலினி தேவி (42), மகள் தமிழினி (12), மகன் மாதவன் (7) ஆகியோர் நேற்று இலங்கை தலைமன்னாரில் இருந்து படகில் புறப்பட்டு இரவில் தனுஷ்கோடி கடற்பகுதியில் வந்திறங்கினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராமேஸ்வரம் மரைன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இலங்கை தமிழர்கள் நால்வரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார், புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு பிறகு நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுவர்.

Related Stories: