‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தில் முதல் அதிரடி அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை: மலைக்கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும்திட்டத்தை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் நேரில் ஆய்வு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில் கடந்த அதிமுக ஆட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளது, ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது. இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மலைக்கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி உள்ளார்.  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசின் திட்டங்களின் செயல்பாடு குறித்து நேரில் களஆய்வு செய்யும் ‘களஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை வேலூர் மாவட்டத்தில் இருந்து கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். அங்கு 2 நாட்கள் முகாமிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்கள், உயரதிகாரிகளுடன் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்தும், அவற்றின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இக்கலந்தாய்வில் தலைமை செயலாளர் இறையன்பு உட்பட அரசின் துறைவாரியான செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பலாம்பட்டு என மலை கிராமங்களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டம், ஐஏஒய், பசுமை வீடு திட்டம் என நடந்த முறைகேடுகள் குறித்து ஆவணங்கள் கொடுக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இதுதொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல் பிற துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மலை கிராமங்களில் வீடுகள் கட்டாமலே கட்டியதாக கணக்கு காட்டப்பட்டது. அதேபோல் தனிநபர் கழிவறைகள் திட்டத்திலும் கட்டாமலே கணக்கு காட்டியது, 100 நாள் வேலைத்திட்ட முறைகேடு என பல்வேறு புகார்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆணையர் தாரேஸ்அகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஆர்த்தி, பிடிஓ சுதாகர் உட்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பீஞ்சமந்தை ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் நேரில் சென்று பிரதமர் வீடு கட்டும் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்து உள்ளூர் மக்களிடமும், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களிடமும் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வீடு கட்டுவதற்காக முதல் தவணை  பணம் வழங்கப்பட்டும் கட்டாமல் வெறும் கூரை மட்டுமே போட்டிருந்தது, 2 தவணை  பணம் வாங்கியும் எந்த பணியுமே செய்யாமல் விட்டுவிட்டது, வீடே கட்டாமல்  முழுமையாக பணத்தை எடுத்தது என 26 பயனாளிகளின் பட்டியல் எடுக்கப்பட்டது.  

அதேேபால் தனிநபர் கழிவறைகள் கட்டியும் பயன்படுத்தாமல் இருப்பது, கழிவறைகள்  கட்டாமலே பணம் பெற்றது என பலரது பெயர்கள் பட்டியலிடப்பட்டன. இதையடுத்து  பணம் பெற்று வீடு கட்டாதவர்களிடம் இருந்து அந்த பணத்தை திரும்ப பெறுவதற்கான  நடவடிக்கை எடுக்கும்படியும், அரைகுறையாக பணி முடித்தவர்களுக்கு வீடுகளை  விரைந்து கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும் திட்ட இயக்குனர், வட்டார  வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் தாரேஸ்அகமது  உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தியிடம் கேட்டபோது, ‘ஆணையர் ஆய்வின்போது பலரும் வீடுகள் கட்டி முடித்திருந்தனர். பலர் வீடுகள் கட்டாமல் இருந்தனர். அந்த வீடுகளை விரைந்து கட்டி முடிக்கும்படி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மற்றபடி எதுவும் இல்லை’ என்று கூறினார். முறைகேடு தொடர்பாக பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக ஆட்சிக்காலத்தில்  முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.

Related Stories: